
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தானின் கருத்தை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது.
ஆனால், இன்றைய நேர்காணலில், இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, பாகிஸ்தான், இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியிருக்கிறதே, அதனை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? என்று கேள்விக்கு பதிலளித்த இந்திய முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
அந்தப் பதிவில், “முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகானிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் உடனடியாகக் கூட்டப்பட்டால் மட்டுமே இவற்றைக் கேட்க முடியும். மோடி அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளது.
நமது நாட்டின் விமானப் படை விமானிகள் தங்களது உயிரைப் பணயம் வைத்து எதிர்களுடன் போரிட்டனர். நமது தரப்பிலும் சில இழப்புகள் இருந்தன. இருந்தாலும் நமது விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
முப்படைத் தளபதி நமது நாட்டு ஆயுதப்படையினர் சாதித்து விட்டதாக கூறுகிறார். அவர்களின் துணிச்சலுக்கும், வீரத்துக்கும் தலைவணங்குகிறோம். எதுவாயினும், இந்தச் செயல்திட்டம் குறித்து விவாதித்தால் மட்டும் தெரியவரும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் போரை நிறுத்திவிட்டதாக மீண்டும் ஒரு முறை கூறியிருக்கிறார். இது சிம்லா ஒப்பந்தத்துக்கு எதிரானது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! முப்படை தலைமைத் தளபதி ஒப்புதல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.