

ரஷியாவில் காணாமல்போன இந்திய மருத்துவ மாணவரின் உடல் ரஷிய அணையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசிப்பவர் அஜித் சிங் சௌத்ரி. இவர் கடந்த 2023இல் ரஷியாவில் உள்ள பாஷ்கிர மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். அவர் ரஷியாவின் உஃபா நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில், அக்டோபர் 19ம் தேதியன்று அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து பால் வாங்கச் செல்வதாக நண்பர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி விடுதிக்கு வரவில்லை. இவர் காணாமல் போயுள்ளாதாக அங்குள்ள போலீஸாருக்கு நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அஜித் சிங்கை போலீஸார் தேடத் தொடங்கினர்.
இதையடுத்து, அஜித் சிங் சௌத்ரியின் உடல் காணாமல்போய் 19 நாள்களுக்குப் பிறகு ரஷியாவின் வெள்ளை நதிக்கு அருகிலுள்ள ஒரு அணையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷியாவின் உள்ள இந்தியத் தூதரகம் எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால் 22 வயதான அஜித் சிங் சௌத்ரியின் குடும்பத்துக்கு அவரது மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
காணாமல்போன மருத்துவ மாணவர் சௌத்ரியின் உடைகள், தொலைபேசி, காலணிகள் ஆற்றங்கரையிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறினார்.
கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்த அஜித், மருத்துவ படிப்பைத் தொடர மிகுந்த நம்பிக்கையுடனும், பெற்றோர்களின் கடின உழைப்பாலும் ரஷியாவிற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஆற்றில் அஜித்தின் உடல் கண்டெடுக்கப்பட்ட செய்தி அஜித் சிங் குடும்பத்திற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது குடும்பத்திற்கு மிகவும் துக்ககரமான செய்தி. நம்பிக்கைக்குரிய இளம் வயது இளைஞரை இழந்துவிட்டோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மருத்துவ மாணவரின் மரணச் செய்தியைக் கேட்டு குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் சௌத்ரியின் உடலை மீட்டுப் பாதுகாப்பாக வீட்டிற்குக் கொண்டுவர உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் வெளிநாடுகளில் சென்று படித்தால் செலவு குறையும் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். ஆனால், அங்குள்ள சூழ்நிலைகளை அவர்கள் நிச்சயம் அறிந்திருக்க மாட்டார்கள். அநியாயமாக ஒரு உயிர் பறிபோனது தான் மிச்சம்.
இதையும் படிக்க: வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.