பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சயித், வங்கதேசத்தை ஏவுதளமாகக் கொண்டு இந்தியா மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக உளவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில், அக். 30ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விடியோ மூலம் இந்த தகவல் வெளியாகியிருப்பதாகவும், லஷ்கர் - ஏ - தொய்பா தளபதி சைஃபுல்லா சயீஃப், இந்த அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹபீஸ் சயீத், வெறுமனே சும்மா இருக்கவில்லை, இவர் வங்கதேசத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல்கள் நடத்த திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏற்கனவே, கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தினர் தயாராக இருப்பதாகவும் அவர் விடியோவில் தெரிவித்துள்ளார்.
ஜிஹாத் என்ற பெயரில், இந்திய எல்லையோரம் உள்ள வங்கதேசப் பகுதியில், அந்நாட்டு இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சிகளை அளித்து, அங்கிருந்து இந்தியா மீது தாக்குதல்களை நடத்த சயீத் திட்டமிட்டு வருவதாகவும், இந்தியா மீதான போருக்குத் தயாராகுமாறு மக்களை ஊக்கப்படுத்துவது போல பேசுவதும் விடியோவில் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கெடுபயனாக, இந்த கூட்டத்தில், பாகிஸ்தானின் ஏராளமான சிறுவர்கள், பங்கேற்றிருப்பதாகவும், அவர்களை இந்தியாவுக்கு எதிரான போருக்குத் தயார் படுத்துவது போல இந்த பேச்சு அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாதம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என்று இந்தியா பல ஆண்டுகளாகக் குற்றம்சாட்டி வந்துள்ள நிலையில், தற்போது சிறுவர்கள் மத்தியில், பயங்கரவாத பேச்சு தொடர்பான விடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் இந்த விடியோவில், தற்போது நம்முடன் அமெரிக்கா ஒன்றாக உள்ளது. விரைவில் வங்கதேசமும் நம்முடன் இணைந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த விடியோ வெளியானதைத் தொடர்ந்து, வங்கதேச - பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்ளும் வகையில், இந்திய பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணிகளையும், வங்கதேசத்திலிருந்து ஊடுருவல்களையும் தடுத்து நிறுத்த தீவிரமாக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.