

புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே, திங்கள்கிழமை இரவு 6.52 மணிக்கு கார் வெடிப்புச் சம்பவம் நடந்த நிலையில், காரை ஓட்டி வந்ததாகக் கருதப்படும் முகமது உமர், கூட்டம் நிறைந்த இடமாக தேடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முதலில், கார் வெடிப்புக்கு உள்ளான ஐ20 கார், கன்னௌட் அருகே பிற்பகல் 2.30 மணியளவில் வட்டமடித்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், கன்னௌட் பகுதியை அந்த கார் வட்டமடித்து, அதிக கூட்டம் நிறைந்த பகுதி இருக்கிறதா என்று கார் ஓட்டுநர் நோட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தில்லிக்கு பிற்பகலிலேயே காரை ஓட்டி வந்த முகமது உமர், அன்று மாலை வரை, பல்வேறு இடங்களை ஆய்வு செய்து, அதிகக் கூட்டம் இருக்கும் இடமாகத் தேர்வு செய்து, அதிக உயிரிழப்புகள் இருக்கும் வகையில் உரிய இடத்தைத் தேடியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் முகதலில் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கௌரி ஷங்கர் கோயில் அருகே சென்றிருக்கிறார். பிறகு, சுனேஹி மசூதி அருகே காரை நிறுத்திவிட்டு சுமார் 3 மணி நேரம் காத்திருந்துள்ளார்.
அதாவது, ஃபரிதாபாத்திலிருந்து புறப்பட்டு அவர் தில்லி செங்கோட்டையை அடைவதற்கு முன்பு வரை சுமார் 12 மணி நேரப் பயணத்தை பல்வேறு இடங்களிலும் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து வரும் என்ஐஏ அதிகாரிகள், தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை கார் ஓட்டுநர் தேடியிருக்கலாம் என்பதை கண்டறிந்துள்ளனர்.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் கோரில் முகமது உமரைத் தவிர வேறு யாராவது இருந்தார்களால், இல்லை பாதி வழியில் அதிலிருந்து யாராவது வெளியேறினார்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஆச்சரியமூட்டும் வகையில், சம்பவம் நடக்க இரண்டு நாள்களுக்கு முன்பு, ஹரியாணா எண் பலகையுடன் வெடிப்புக்கு உள்ளான ஐ20 கார், ஃபரிதாபாத் பெட்ரோல் நிலையம் அருகே நின்றிருந்ததும், அதில் மூன்று பேர் இருந்துள்ளதும் பதிவாகியிருப்பதாகக் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.