

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள், மருத்துவமனை வாசலில் உணவும், தங்குமிடமும் இன்றி 24 மணிநேரத்துக்கு மேலாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை கார் வெடித்த சம்பவத்தில் 12 பேர் பலியான நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒத்துழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் உறவினர்கள் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் 24 மணிநேரத்துக்கு மேலாக காத்திருப்பதாகவும், அரசு தரப்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களைச் சந்திக்க குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை என்றும், அடிப்படை வசதிகள்கூட இல்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
காயமடைந்த ஒருவரின் மருமகன் உஜைஃபா என்பவர், தனது மாமாவின் உடல்நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் மருத்துவமனை தரப்பில் தங்களுக்கு அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
”இந்த மருத்துவமனையில் எனது மாமா அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து இங்கே வந்தபோது, காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை, சரியான இருக்கை வசதி இல்லை, அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. யாருடைய உதவியும் கிடைக்காத நிலையில் உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவா ஜெய்ஸ்வால் என்பவரின் உறவினர் சைலேந்திர ஜெய்ஸ்வால் கூறியதாவது;
“சமூக ஊடகங்கள் மூலம் குண்டு வெடிப்பு சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்தேன். பின்னர், சிவா இங்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தேன். எந்த அரசு அதிகாரியும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் தேவைகளை ஏற்படுத்தி கொடுப்பது அரசின் குறைந்த கடமை. ஆனால், அடிப்படை தேவைகளுக்காக நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.