

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாக மத்திய அரசு இன்று (நவ. 12) அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை உயர்நிலைக் குழு கூட்டத்திற்குப் பிறகு, தில்லி சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் வாயில் அருகே நவ. 10ஆம் தேதி கார் ஒன்று மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென வெடித்துச் சிதறியது. அருகிலிருந்த மற்ற வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததால், இச்சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பூடானிலிருந்து தில்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த உளவுத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு தில்லி கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்துடன் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் நிறைவேற்றம்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதாகவும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் எந்த வடிவில் நுழைந்தாலும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கார் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவுக்கு உலக நட்பு நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதை அமைச்சரவை வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் வெடிப்புக்குப் பிறகு விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், அவசர கால பணியாளர்கள் மற்றும் குடிமக்களின் பணிகளை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து நீதி கிடைக்கச் செய்ய உயர்நிலை விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தில்லி சம்பவம்: தேடப்பட்டு வந்த சிவப்பு கார் சிக்கியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.