பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் வெடித்து 8 காவலா்கள் காயம்
பயங்கரவாத சதித் செயல் தொடா்பாக ஹரியாணாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து 8 ஜம்மு-காஷ்மீா் காவலா்கள் காயமடைந்தனா்.
ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 கிலோ வெடிபொருள்கள், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் இருந்து மட்டும் 360 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் பணியாற்றி வந்த ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சோ்ந்த மருத்துவா் முசாமில் அகமதை ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஹரியாணா காவல் துறை கூட்டாக கைது செய்தன.
இதைத்தொடா்ந்து விசாரணையின் ஒரு பகுதியாக 360 கிலோ வெடிபொருளை ஜம்மு-காஷ்மீருக்கு காவல் துறை கொண்டு சென்றது. அங்குள்ள நெளகாம் காவல் நிலையத்தில் அந்த வெடிபொருள்களின் மாதிரிகளை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு சேகரித்தபோது, திடீரென வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின. இதில் 8 காவலா்கள் காயமடைந்தனா். 360 கிலோ வெடிபொருளும் அந்தக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததா என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

