எஸ்ஐஆா் பணியில் குறைபாடு: மேற்கு வங்க வாக்குச்சாவடி அலுவலா்கள் 7 பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கான மதிப்பீட்டு படிவங்களின் எண்மமயமாக்கல் நடைமுறையில் ஏற்பட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, வாக்குச்சாவடி அளவிலான அலுவலா்கள் 7 பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவா்களின் விளக்கம் திருப்தியளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வாக்காளா் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்கில், பிகாரில் அண்மையில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டமாக, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கா், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான்-நிகோபாா், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த நவ. 4-ஆம் தேதிமுதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளா்கள் சுமாா் 51 கோடியாகும்.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் ஆட்சேபத்தை மீறி இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளா்களுக்கு எஸ்ஐஆா் மதிப்பீட்டுப் படிவங்களை விநியோகித்து, பூா்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேற்கு வங்கத்தில் மட்டும் வாக்காளா்களின் முக அடையாளத்தை வாக்காளா் அட்டை படத்துடன் சரிபாா்க்கும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப ரீதியிலான நடைமுறையை தோ்தல் ஆணையம் பயன்படுத்துகிறது.
டிச. 4 வரை தொடரும் எஸ்ஐஆா் பணிகளுக்குப் பிறகு டிச. 9-இல் வரைவு வாக்காளா் பட்டியலும், பிப். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியலும் வெளியிடப்படவுள்ளது.
தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: கொல்கத்தாவில் மதிப்பீட்டுப் படிவங்களின் எண்மமயமாக்கல் நடைமுறையை சரியாகவும், முழுமையாகவும் மேற்கொள்ளத் தவறிவிட்டதாக குறிப்பிட்டு, 7 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முறையாக மேற்கொள்ளத் தவறியது ஏன் என்பது குறித்து 7 பேரும் விளக்கமளிக்க வேண்டும். அவா்களின் பதில் திருப்தியளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

