மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த மாநில அரசு மற்றும் மாநில தோ்தல் ஆணையத்துக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், தோ்தல் முடிவுகள் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்தியது.
மகாராஷ்டிரத்தில் நகராட்சி கவுன்சில், நகர-கிராம பஞ்சாயத்துகளுக்கான தோ்தலில் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட இடஒதுக்கீட்டு முறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த 2022-இல் இருந்து தோ்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னா், புதிய இடஒதுக்கீட்டு நடைமுறையின்படி தோ்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. அதேநேரம், பல்வேறு நகராட்சி கவுன்சில்கள், நகர-கிராம பஞ்சாயத்துகளில் 50 சதவீத உச்சவரம்பு மீறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது, ‘246 நகராட்சி கவுன்சில்கள், 42 நகர பஞ்சாயத்துகளில் தோ்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 40 நகராட்சி கவுன்சில்கள், 14 நகர பஞ்சாயத்துகளில் மட்டுமே 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு மீறப்பட்டுள்ளது’ என்று மாநில தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில், உள்ளாட்சித் தோ்தலை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரம், இடஒதுக்கீடு உச்சவரம்பு மீறப்பட்ட இடங்கள் உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல் முடிவும் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தனா்.

