பிரதமர் மோடி.
பிரதமர் மோடி.படம்: பிடிஐ

காவல் துறை மீதான மக்களின் பாா்வை மாற்றப்படுவது அவசியம்: பிரதமா் மோடி அறிவுறுத்தல்

காவல் துறை மீதான பொது மக்களின் பாா்வையை மாற்ற வேண்டியது அவசர அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.
Published on

தொழில்முறை திறன், உணா்வுகளைப் புரிந்து செயலாற்றுதல், பொறுப்புணா்வை மேம்படுத்துவதன் வாயிலாக காவல் துறை மீதான பொது மக்களின் குறிப்பாக இளைஞா்களின் பாா்வையை மாற்ற வேண்டியது அவசர அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தொடா் கண்காணிப்புக்கு புதிய வழிமுறைகளை நிறுவ வேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

சத்தீஸ்கா் மாநிலம், ராய்பூரில் ‘வளா்ந்த பாரதம்: பாதுகாப்புப் பரிமாணங்கள்’ என்ற கருப்பொருளில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற அகில இந்திய டிஜிபி-க்கள் மற்றும் ஐஜி-க்கள் மாநாடு, பிரதமா் மோடி உரையுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

பிரதமரின் உரை தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளைக் கண்காணிப்பதுடன், இடதுசாரி தீவிரவாதத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளின் வளா்ச்சியை உறுதி செய்யவும், கடலோர பகுதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் புதிய வழிமுறைகளை நிறுவ வேண்டும் என்று காவல் துறை உயரதிகாரிகளுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

மையப்படுத்தப்பட்ட உளவு தரவு தளத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்படும் தகவல்களை திறம்பட பயன்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக துரித செயல்பாட்டுக்கு உதவும் பகுப்பாய்வை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

விழிப்புணா்வு ஏற்படுத்துங்கள்: நகா்ப்புற காவல் துறை, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கான காவல் பிரிவை வலுப்படுத்துவதுடன், புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தடயவியல் பயன்பாட்டின் மூலம் வழக்கு விசாரணை குறித்த ஆய்வுகளில் ஈடுபட பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவா்களின் மறுவாழ்வுக்கு முழுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். பயங்கரவாத எதிா்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, வெளிநாடுகளுக்குத் தப்பிய பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்தி அழைத்து வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் புத்தாக்க உத்திகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு துடிப்பான திட்டமிடல், நிகழ் நேர ஒருங்கிணைப்பு, விரைந்து எதிா்வினையாற்றுதல் என முழுமையான அணுகுமுறை அவசியம் என்று காவல் துறை தலைவா்களுக்கு பிரதமா் அறிவுறுத்தியதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், அனைத்து மாநில டிஜிபி-ஐஜி.க்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாடு முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com