
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை, அவர்கள் ஏற்காத நமது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா, இன்று (அக். 1) தில்லியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு நிறைவு செய்ததை குறிக்கும் விதமாக ரூ.100 நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டார்.
இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நாணயம், அவர்கள் ஏற்காத இந்திய அரசியலமைப்பிற்கு ஒரு பெரிய காயம் மற்றும் அவமதிக்கும் செயல் ஆகும்.
அவர்களது பிரிவிணைக் கருத்தான இந்துத்துவ ராஷ்ட்ரத்தின் அடையாளமாக அவர்கள் ஊக்குவிக்கும் மாறுபட்ட பாரத மாதா படத்தை அதிகாரப்பூர்வ நாணயத்தில் அச்சிடுவது மிகவும் ஆட்சேபனைக்குரியது.
1963 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு நாள் பேரணியில், சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடம்பெற்றுள்ளது போல் அஞ்சல் தலையில் அச்சிட்டுள்ளது பொய்யான வரலாறு.
இது, இந்தியா - சீனா இடையிலான போரின்போது அந்த அமைப்பு வெளிப்படுத்திய தேசபக்தியை அங்கீகரிக்க, அப்போதைய பிரதமர் நேரு 1963 குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்தார் எனும் பொய்யை அடிப்படையாகக் கொண்டது.
சுதந்திரப் போராட்டத்தில் விலகி இருந்து, பிரிட்டனின் பிரித்தாளும் உத்திகளை வலுப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெட்கக்கேடான பங்கை மூடிமறைக்கும் செயல்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, பிரதமர் மோடி தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவினைவாதக் கொள்கைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.