
ஹரியாணாவில் மற்றொரு காவல் துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா காவல் பயிற்சி மைய ஐஜி பூரண் குமாா் கடந்த வாரம் அக். 7ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மற்றொரு காவல் துறை அதிகாரியும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம் ரோதாக் பகுதியிலுள்ள லாதாத் - தாமர் சாலையிலுள்ள வீட்டில் காவல் துறை துணை ஆய்வாளர் சந்தீப் குமார் உயிரிழந்த நிலையில் இன்று பிற்பகல் மீட்கப்பட்டார். அவர் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்ததால், தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனகாவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் இறப்பதற்கு முன்பு பதிவு செய்திருந்த விடியோவையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், தற்கொலை செய்துகொண்ட பூரண் குமார் ஊழல் அதிகாரி என்றும், தனது ஊழல் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரோதாக் சரகத்தில் பணிமாறுதல் பெற்று பூரண் குமார் பொறுப்பேற்றதும் நேர்மையான அதிகாரிகளை ஊழல் அதிகாரிகளைக் கொண்டு மாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்திற்கு மனு அளிக்க வருபவர்களிடம் பணம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள் என்றும், பணிமாறுதல் என்ற காரணத்தை அச்சுறுத்தலாக திணித்து பெண் காவலர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவார்கள் என்றும் விடியோவில் சந்தீப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடியோவின் உண்மைத்தன்மை மற்றும் பின்புலம் குறித்து உறுதியாக அறியமுடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் எதையும் விரிவாகக் கூற முடியாது என்றும் தடயவியல் நிபுணர்களின் சோதனைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என ரோதாக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். போரியா தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்கொலை செய்துகொண்ட பூரண் குமாரின் இல்லத்திற்குச் சென்று இன்று காலை அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் நயாப் சிங் சைனியும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை வைத்திருந்த நிலையில், மற்றொரு காவல் துறை அதிகாரியின் தற்கொலை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் ஆறுதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.