
ஹரியாணாவில் தற்கொலை செய்துகொண்ட காவல்துறை ஐஜி பூரண் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்நீத் குமாருக்கு எதிராக தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், அம்நீத் குமாரின் சகோதரரும் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினருமான அமித் ரத்தன் மற்றும் மேலும் இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹரியாணா காவல் பயிற்சி மைய ஐஜி பூரண் குமாா் (52) கடந்த அக். 7 ஆம் தேதி, சண்டீகரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக பூரண் குமாா் எழுதிய 8 பக்க கடிதத்தில் ஹரியாணா காவல் துறைத் தலைவா் (டிஜிபி) சத்ருஜித் கபூா் மற்றும் ரோத்தக் எஸ்பி நரேந்திர பிஜாா்னியா உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் தன்னை ஜாதியரீதியாக பாகுபடுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஹரியாணா முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, காவல் பயிற்சி மையத்தில் பணிபுரியும் உதவி சார் ஆய்வாளர் சந்தீப் லத்தார், கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக, அவரது செல்போனில் பதிவு செய்த விடியோவில், ஐஜி பூரண் குமாருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், சந்தீப் லத்தாரை தற்கொலைக்கு தூண்டியதாக பூரண் குமாரின் மனைவி அம்நீத் குமார், அவரது சகோதரர் அமித் ரத்தன், காவல்துறையைச் சேர்ந்த சுஷில் குமார் மற்றும் சுனில் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சந்தீப் லத்தார் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலை உடற்கூராய்வு செய்ய குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.