
தில்லி ரோஹினி பகுதியில் பிகாரைச் சேர்ந்த 4 ரெளடிகள் காவல்துறையினரின் என்கவுன்டரில் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய குற்றச் செயலில் ஈடுபட அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
பிகாரின் பிரபல ரெளடியான ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
இதனடிப்படையில், பிகார் காவல்துறையினரும் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினரும் இணைந்து இன்று அதிகாலை 2.20 மணியளவில் தில்லி ரோஹினி பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிலரை சோதனை செய்துள்ளனர்.
அப்போது, காவல்துறையினர் மீது நான்கு ரெளடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் பதில் தாக்குதலில் ரஞ்சன் பதக், பிம்லேஷ் சாஹ்னி (25), மனிஷ் பதக் (33), அமன் தாக்குர் (21) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். நால்வரையும் ரோஹினி மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்ற நிலையில், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.
மேலும், என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரும் பிகாரில் கொலை, ஆயுதக் கடத்தல் உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என தில்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, என்கவுன்டர் நடத்தப்பட்ட இடத்தை தில்லி மற்றும் பிகாரைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்னதாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த 4 முக்கிய ரெளடிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.