
சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கும், தலைநகர் தில்லிக்கும் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள், சுமார் 5 ஆண்டுகள் கழித்து வரும் அக்.26 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரத்துக்கும் சீனாவின் குவாங்சோவுக்கும் இடையில் முதல் நேரடி விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தில்லி மற்றும் சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு இடையில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி முதல் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வாரத்தின் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஏ330-200 ரக விமானங்களின் மூலம் இந்த விமான சேவையானது இயக்கப்படுகின்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காலத்தில் சீனா மற்றும் இந்தியா இடையிலான நேரடி விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால், கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழல்களைத் தொடர்ந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை.
இதையடுத்து, இந்தியா மற்றும் சீனா இடையில் அக்டோபர் மாதம் இறுதியில் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஐஃபோன் 17 ப்ரோ! காரணம் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.