

சதாராவில் தன்னை போலீஸ் அதிகாரி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டி பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயது மருத்துவர். இவர் பால்தான் வட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். வியாழக்கிழமை இரவு பால்தானில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது உள்ளங்கையில் எழுதப்பட்டிருந்த தற்கொலைக் குறிப்பில், துணை ஆய்வாளர் கோபால் படானே தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், மற்றொரு போலீஸ் பிரசாந்த் பங்கர் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்தக் குறிப்பு தடயவியல் தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சதாரா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மருத்துவர் இதுகுறித்து தனது மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
ஆனால் எந்த நீதியும் கிடைக்கவில்லை.
அதனால்தான் அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்படுகிறது என்றுதெரிவித்தார். இதனிடையே சதாரா காவல் கண்காணிப்பாளரிடம் பேசிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட படானே மற்றும் பங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சதாரா காவல் கண்காணிப்பாளர் துஷார் தோஷி உறுதிப்படுத்தினார். இரு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்களைக் கண்டுபிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். பெண் மருத்துவரின் தற்கொலை சம்பவம் மகாராஷ்டிரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.