

மகாராஷ்டிரத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ஆளும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இது தற்கொலை அல்ல; நிறுவனமயமாக்கப்பட்ட கொலை என விமர்சித்துள்ளார்.
பாஜகவுடன் தொடர்புடைய சில செல்வாக்கு மிக்க நபர்கள், பெண் மருத்துவருக்கு அழுத்தம் கொடுக்க முயன்றதாகவும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் மருத்துவா், சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா்.
மருத்துவமனை அருகேவுள்ள பல்தான் பகுதியில் உள்ள விடுதி அறையில், கடந்த வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
இறந்த பெண் மருத்துவா், தனது உள்ளங்கையில் எழுதியிருந்த தற்கொலைக் குறிப்பில், உதவி ஆய்வாளா் கோபால் பதானே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மென்பொறியாளர் பிரசாந்த் பாங்கா் மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, கோபால் பதானே, பிரசாந்த் பாங்கா் ஆகியோரை காவல் துறையினர் தேடி வந்தனர். இதில், கோபால் பதானே காவல் நிலையத்தில் இன்று சரண்டைந்துள்ளார்.
இந்நிலையில், பெண் மருத்துவர் தற்கொலை விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இது தற்கொலை அல்ல, நிறுவனமயமாக்கப்பட்ட கொலை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது,
மகாராஷ்டிரத்தின் சதாராவில் பெண் மருத்துவர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டது, எந்தவொரு நாகரிக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் சோகமாகும்.
மற்றவர்களின் துன்பத்தைப் போக்க விரும்பிய நம்பிக்கைக்குரிய மருத்துவர், ஊழல் அமைப்பிற்குள் குற்றவாளிகளின் சித்திரவதைக்கு பலியாகியுள்ளார்.
குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த அப்பாவிப் பெண்ணுக்கு எதிராக கற்பழிப்பு மற்றும் சுரண்டல் என மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்தனர்.
அறிக்கைகளின்படி, பாஜகவுடன் தொடர்புடைய சில செல்வாக்கு மிக்க நபர்கள் அவரை ஊழலுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிகாரத்தால் பாதுகாக்கப்பட்ட குற்றவியல் சித்தாந்தத்தின் மிகவும் இழிவான உதாரணம் இது. இது தற்கொலை அல்ல; நிறுவனமயமாக்கப்பட்ட கொலை.
மருத்துவரின் மரணம் பாஜக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் இரக்கமற்ற முகத்தை அம்பலப்படுத்துகிறது.
நீதிக்கான இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். எங்களுக்கு நீதி வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கர்னூல் பேருந்து விபத்து: போதையில் பைக் ஓட்டியவரே காரணம் - தடயவியல் அறிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.