

மோந்தா புயலின் தாக்கத்தால், வரும் அக்.31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில், தீவிர புயலாக உருவாகியுள்ள மோந்தா புயல் இன்று (அக். 28) மாலை அல்லது இரவு ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், தமிழகம், ஆந்திரம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், இந்தத் தீவிர புயலானது கரையைக் கடந்த பின்பு படிப்படியாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து நகரும் எனவும்; இதனால், மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில், வரும் அக்.31 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், மேற்கு வங்கத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூர், ஜார்கிராம், புருலியா, கிழக்கு மற்றும் மேற்கு பர்த்வான், பிர்பூம் மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இமய மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களான டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி, அலிபுர்துவார் மற்றும் கூச் பெஹாரின் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் (7 முதல் 20 செ.மீ.) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்லி ஆகிய மாவட்டங்களில் அக்.31 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்! மக்களுக்கு ஆந்திர அரசு எச்சரிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.