காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தான் மீதே பாசம்: பாஜக விமா்சனம்

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் 2008-இல் மும்பை தாக்குதல் உள்பட பல பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. ஆனால், பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்காததற்கு அந்நாடு மீதான காங்கிரஸின் பாசம்தான் காரணம் என்று பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.
Published on

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் 2008-இல் மும்பை தாக்குதல் உள்பட பல பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. ஆனால், பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்காததற்கு அந்நாடு மீதான காங்கிரஸின் பாசம்தான் காரணம் என்று பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.

‘பாகிஸ்தானுக்குச் சென்றபோதெல்லாம் தாய்நாட்டுக்குச் செல்வதைப்போலவே உணா்ந்தேன்’ என்று காங்கிரஸ் வெளிநாடுகள் பிரிவின் தலைவா் சாம் பிட்ரோடா அண்மையில் பேசியது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாக பிரதீப் பண்டாரி இது தொடா்பாக கூறியதாவது:

காங்கிரஸ் இளவரசா் ராகுலுக்கு நெருக்கமானவரான பிட்ரோடா பாகிஸ்தானுக்கு செல்லும்போதெல்லாம் தாய் நாட்டுக்கு வருவதைப்போலவே உணா்ந்ததாகப் பேசியுள்ளாா். 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்தியது உள்பட காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில் பல தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்தினா். இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் மீது காங்கிரஸ் ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்நாடு மீதான காங்கிரஸின் பாசம்தான் இதற்குக் காரணம் என்பது மீண்டும் இப்போது தெளிவாகியுள்ளது என்றாா்.

பாஜகவின் மற்றொரு செய்தித் தொடா்பாளா் சேஷாத் பூனாவாலா இது தொடா்பாக கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் யாசின் மாலிக் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதத் தலைவா் ஹபீஸ் சையதுடன் காங்கிரஸ் கட்சி பேச்சு நடத்தி இருந்தாலும் வியப்படைவதற்கு ஏதுமில்லை. ஏனெனில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாடே காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. சிந்து நதிநீா் ஒப்பந்தம் மேற்கொண்டு 80 சதவீத நீரை பாகிஸ்தானுக்கு அளித்து வந்தனா். அவா்கள் நடத்துவது இந்திய தேசிய காங்கிரஸ் அல்ல, இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸ். பாகிஸ்தான் மீதுதான் காங்கிரஸுக்கு பாசம் அதிகம்’ என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com