

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி தலைமையிலான 6 போ் குழு சீனாவுக்கு 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சா்வதேச உறவுகளுக்கான துறை விடுத்த அழைப்பின்பேரில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீன கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த அழைப்பின் பேரில் கட்சியின் 6 உறுப்பினா்கள் கொண்ட குழு சீன தலைநகா் பெய்ஜிங்குக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. வரும் 30-ஆம் தேதி வரை சீனாவில் தங்கியிருக்கும் அவா்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளனா்.
கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி தலைமையிலான இக் குழுவில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பீரோ) உறுப்பினா்கள் முகமது சலீம், ஜிதேந்திர செளதரி, ஆா். அருண்குமாா், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா்கள் கே.ஹேமலதா, சி.எஸ்.சுஜாதா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பைத் தொடா்ந்து, பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு வா்த்தகத்தை வலுப்படுத்த இந்தியா முனைப்புக் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோருடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், உச்சி மாநாட்டில் மூன்று தலைவா்களும் மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டு தங்களின் நட்புறவை வெளிப்படுத்தினா்.
இந்தச் சூழலில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழு சீன பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வாக்குத் திருட்டு நடைபெறும் வரை வேலையின்மை, ஊழல் தொடர்ந்து அதிகரிக்கும்: ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.