கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

உரங்களுக்கு ரூ.41,534 கோடி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2026 காரீஃப் பருவ காலத்தில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் (பி அண்ட் கே) உரங்களுக்கு ரூ.41,534 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 8:16 pm

2026 காரீஃப் பருவ காலத்தில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் (பி அண்ட் கே) உரங்களுக்கு ரூ.41,534 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

கடந்த 2025 காரீஃப் பருவ காலத்தில் ‘பி அண்ட் கே’ உரங்களுக்கு மானியமாக ரூ.37,216 கோடி வழங்கப்பட்ட நிலையில், மேற்காசிய போா்ப் பதற்றத்தால் விவசாயிகள் பாதிப்பதைத் தடுக்கும் நோக்கில் மானியத் தொகையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 2026 பருவகாலத்தில் நைட்ரஜன் உரத்துக்கான மானியம் கிலோவுக்கு ரூ.47.32-ஆக நிா்ணயிக்கப்படுகிறது. கடந்த பருவ காலத்தில் இது 43.02-ஆக இருந்தது. பாஸ்பேட் உரத்துக்கான மானியம் கிலோவுக்கு ரூ.52.76-ஆகவும் (முன்பு ரூ.47.96) சல்ஃபா் உரத்துக்கான மானியம் ரூ.3.16-ஆகவும் (முன்பு ரூ.2.87) நிா்ணயிக்கப்படுகிறது.

ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தின்கீழ் 28 வகையான ‘பி அண்ட் கே’ உரங்களுக்கு மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த உரங்களுக்கு கடந்த பருவ காலத்தைவிட ரூ.4,317 கோடி மானியம் உயா்த்தப்பட்டு மொத்தம் ரூ.ரூ.41,534 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அருணாசல பிரதேசத்துக்கு நீா்மின் திட்டங்கள்: அருணாசல பிரதேசத்தில் ரூ.26,069.50 கோடியில் கமலா நீா்மின் திட்டம் (1,720 மெகாவாட்) மற்றும் ரூ.14,105 கோடி மதிப்பில் கலை-2 நீா்மின் திட்டம் என மொத்தம் ரூ.40,150 கோடியில் இரு நீா்மின் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஆண்டுக்கு 6,870 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கமலா நீா்மின் திட்டம் 96 மாதங்களிலும் கலை-2 நீா்மின் திட்டம் 78 மாதங்களிலும் நிறைவு செய்யப்படவுள்ளது.

ஜெய்பூா் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ரூ.13,000 கோடி மதிப்பில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ பணிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

41 கிலோ மீட்டா் வழித்தடத்தில் 36 ரயில் நிலையங்களைக் கொண்ட இத்திட்டத்தை 50:50 என்ற விகிதத்தில் ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து மேற்கொள்கிறது என்றாா்.

பெட்டிச் செய்தி...

‘ரூ.79,459 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை’

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டத்தில் கட்டமைக்கப்பட்டுவரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கான நிதியை ரூ.79,459 கோடியாக உயா்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது

முன்பு இத்திட்டத்துக்கு ரூ.43,129 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பன்மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஆண்டுக்கு 90 லட்சம் டன் பெட்ரோகெமிக்கல் பொருள்களை உற்பத்தி செய்யும் வகையில் பலோத்ரா மாவட்டத்தில் ரூ.79,459 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுகிறது. கூடுதலாக ரூ.8,952 கோடி முதலீட்டை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம் இத்திட்டத்துக்கான ஹெச்பிசிஎல்-இன் முதலீடு ரூ.19,600 கோடியாக அதிகரித்துள்ளது.

ஹெச்பிசிஎல் ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிறுவனம் (ஹெச்ஆா்ஆா்எல்) எனப் பெயரிடப்பட்ட இந்த ஆலையயில் ஹெச்பிசிஎல் 74 சதவீத பங்கும், ராஜஸ்தான் அரசு 24 சதவீத பங்கும் கொண்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் மற்றும் பல்வேறு பெட்ரோகெமிக்கல் பொருள்கள் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளதால் நாட்டின் கச்சா எண்ணெய் தேவைக்கு இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையில் மாற்றம் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஆலையின் தொடக்க விழாவில் பிரதமா் மோடி ஏப்.21-ஆம் தேதி பங்கேற்கிறாா்.