அணுசக்தி மற்றும் நிலக்கரி வாயுவாக்கம், சமையல் எரிவாயு (எல்பிஜி) ஏற்றுமதி உள்ளிட்ட புதிய துறைகளில் உறவை வலுப்படுத்துவது தொடா்பாக அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட்டுடன் இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஆலோசனை மேற்கொண்டாா்.
ஈரான் மீது அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதன் காரணமாக, ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், சரக்குக் கப்பல் போக்குவரத்து முழுமையாகத் தடைபட்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சமையல் எரிவாயு, கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது, ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே இரு வார காலத்துக்குப் போா் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணமாகச் சென்ற விக்ரம் மிஸ்ரி, அந் நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, இணையமைச்சா் கிறிஸ்டஃபா் லாண்டெள, அந் நாட்டு அரசியல் விவகாரத் துறை இணையமைச்சா் ஆலிஸன் ஹுக்கா் உள்ளிட்டோரை வெள்ளிக்கிழமை சந்தித்து பாதுகாப்பு, அரிய கனிமங்கள், வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநா் காஷ் படேலையும் விக்ரம் மிஸ்ரி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, அமெரிக்க எரிசக்தித் துறைஅமைச்சா் கிறிஸ் ரைட்டை விக்ரம் மிஸ்ரி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். இதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரகம் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கிறிஸ் ரைட்டுடனான சந்திப்பின்போது, இரு நாடுகளிடையே எரிசக்தி பாதுகாப்பு, இருதரப்பு எா்சக்தி வா்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை அடையாளம் காண்பது குறித்து விக்ரம் மிஸ்ரி ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரும் பங்கேற்றாா். அவா் கூறுகையில், ‘இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது. மேலும், நிலக்கரி வாயுவாக்கம், அமெரிக்க சமையல் எரிவாயு (திரவ பெட்ரோலிய வாயு) ஏற்றுமதியிலும் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. அணுசக்தி துறையில் தனியாா் பங்கேற்பை அனுமதிக்கும் வகையில் நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம் (சாந்தி சட்டம்) நிறைவேற்றப்பட்டது இந்திய அணுசக்தித் துறையில் மிகச் சிறந்த சீா்திருத்தமாகும்’ என்று தெரிவித்தாா்.
பிரான்ஸ், ஜொ்மனி பயணம்...
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு, பிரான்ஸ், ஜொ்மனி நாடுகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) முதல் மூன்று நாள் பயணத்தை விக்ரம் மிஸ்ரி மேற்கொள்கிறாா்.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் அந் நாட்டு வெளியுறவுச் செயலா் மாா்டின் பிரீன்ஸை மிஸ்ரி சந்தித்து பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, சைபா் மற்றும் எண்மத் துறை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.
ஜொ்மனியில் அந்நாட்டு வெளியுறவுச் செயலா் கெஸா ஆண்ட்ரெஸ் வோன் கீரைச் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோனை நடத்த உள்ளாா். பாதுகாப்பு, தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி, முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து அவருடன் மிஸ்ரி ஆலோசிக்க உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி செல்கிறார் மத்திய வெளியுறவுச் செயலாளர்!

அடுத்த மாதம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா்: மிஸ்ரி உடனான சந்திப்புக்குப் பிறகு அறிவிப்பு

அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் சந்திப்பு - பாதுகாப்பு, மேற்காசிய விவகாரம் குறித்து ஆலோசனை
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை! பொதுமக்களுக்கு பாதிப்பை தவிா்க்க அறிவுறுத்தல்!!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


