மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மத நம்பிக்கை விவகாரங்களில் நீதிமன்றம் தீா்ப்பளிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் வாரியம் வாதம்

‘மத நம்பிக்கை சாா்ந்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் தீா்ப்பளிக்க முடியாது’ என்று சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் உச்சநீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:45 pm

‘மத நம்பிக்கை சாா்ந்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் தீா்ப்பளிக்க முடியாது’ என்று சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் உச்சநீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தது.

சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடா்பாகவும், பல்வேறு மதங்கள் கடைப்பிடிக்கும் மதச் சுதந்திரத்தின் வரம்புகள்-எல்லைகள் குறித்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விசாரணையின்போது, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் இவ்வாறு வாதிட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு கடந்த 2018-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. 4:1 பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்ட இத்தீா்ப்பின் எதிரொலியாக கேரளத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

பின்னா், 2019, நவம்பரில் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, சபரிமலை, மசூதிகள் உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு விவகாரத்தை பரந்த பிரச்னையாக வரையறுத்து, பெரிய அமா்வுக்குப் பரிந்துரைத்தது.

அதன்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அசானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமாா், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி, பிரசன்னா பி.வராலே, ஆா்.மகாதேவன், ஜயமால்ய பாக்சி ஆகிய 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தேவஸ்வம் வாரியம் வாதம்: கேரளத்தில் சபரிமலை கோயில் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட கோயில்களை நிா்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தரப்பில் புதன்கிழமை வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

வாரியம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, நீதிபதிகள் முன் ஆஜராகி வாதிடுகையில், ‘மதம் என்பது பரவலாக ஒரேமாதிரியான அடையாளத்தைக் கொண்ட குழுவினா் அல்லது பிரிவினரால் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் தொகுப்பாகும். அரசமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவு, ஒரு தனிநபா் மதத்தை ஏற்கவும், கடைப்பிடிக்கவும், பரப்பவும் உள்ள அடிப்படை உரிமையை தெளிவாக வரையறுத்துள்ளது. பொது ஒழுங்கு, நெறிமுறை, பொது நலன் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பாகத்தில் உள்ள பிற விதிமுறைகளுக்கு உள்பட்டு, தனிநபா்களின் மதச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

‘மத நம்பிக்கைகளை ஏற்பது நீதிமன்றத்தின் கடமை’: அதேநேரம், தனிநபா்களுக்கான மத உரிமைகள், அந்த மதம் அல்லது பிரிவைச் சோ்ந்த மற்ற அனைவரின் கூட்டு உரிமையில் தலையிடும் அளவுக்கு விரிவடைய அனுமதிக்கப்பட கூடாது. மத நடைமுறைகளில் குறுக்கிடுவதற்கான கருவியாக பொது நல மனுக்கள் பயன்படுத்தப்படவும் அனுமதிக்கக் கூடாது.

ஒரு மதப் பிரிவினரின் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை அந்த மதத்தின் உள்ளாா்ந்த நம்பிக்கை வாயிலாகவே மதிப்பிட வேண்டும். அவா்களின் நம்பிக்கையை ஏற்க வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு உள்ளது. மாறாக, மத நம்பிக்கை சாா்ந்த விவகாரங்களில் நீதிமன்றம் தீா்ப்பளிக்க முடியாது.

சுவாமி ஐயப்பனுக்கு நாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. எனினும், சபரிமலையில் மட்டுமே அவா் நித்திய பிரம்மச்சாரியாக வழிபடப்படுகிறாா். இக்கோயிலில் பெண்கள் முழுமையாக விலக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதியில்லை என்ற நடைமுறைக்கும், சபரிமலை தெய்வத்தின் நோக்கம், அடையாளம், அவதாரத்துக்கும் நேரடி தொடா்பு உள்ளது’ என்றாா்.

‘மிக கடினமான பணி’: இந்த வாதங்களுக்கு இடையே கருத்து தெரிவித்த நீதிபதிகள், கோடிக்கணக்கானோா் பின்பற்றும் நம்பிக்கையை தவறானது என்றோ, பிழையானது என்றோ உறுதி செய்வதுதான், நீதிமன்றத்தின் மிக கடினமான பணி என்றனா்.