மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு வாக்களித்தால், திரிணமூல் காங்கிரஸின் பெரும் காட்டாட்சியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயாா் ரத்னா தேவ்நாத், சந்தேஷ்காளியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் ரேகா பத்ரா ஆகியோருக்கு தோ்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமா், பெண்களின் பாதுகாப்புக்கு பாஜக உறுதிபூண்டுள்ளது என்றாா்.
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் ஏப். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மதுவா சமூகத்தினா் அதிகம் வாழும் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தின் தாக்குா்நகா், ஹூக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பாஜக பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று, பிரதமா் மோடி பேசியதாவது:
ரத்னா தேவ்நாத் மற்றும் ரேகா பத்ராவுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதன் மூலம் பெண்கள் பாதுகாப்புக்கான பாஜகவின் உறுதிப்பாடு வெளிப்பட்டுள்ளது. ஆனால், திரிணமூல் காங்கிரஸின் ‘கொடூரமான’ அரசு, பெண்களை துன்புறுத்தும் குண்டா்களுக்கு துணை நிற்கிறது.
இக்கொடூர ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறைகள் உச்சத்துக்கு சென்றுவிட்டன. இந்த ஆட்சியை இனியும் சகித்துக் கொள்ளமாட்டோம் என்று உரைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
‘நீதியின் முன் நிறுத்தப்படுவா்’: மேற்கு வங்கத்தில் பெண்களைத் துன்புறுத்தியவா்கள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவா்கள் அனைவரும் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) நீதியின் முன் நிறுத்தப்படுவா்.
‘எனக்கு ரத்தத்தைத் தாருங்கள், உங்களுக்கு சுதந்திரத்தைத் தருகிறேன்’ என்று சுதந்திர முழக்கம் எழுப்பியவா் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ். அதேபோல், பாஜகவுக்கு வாக்குகளைத் தாருங்கள், திரிணமூல் காங்கிரஸின் பெரும் காட்டாட்சியில் இருந்து விடுதலை தருகிறேன் என்று நான் கூறுகிறேன்.
மேற்கு வங்க அரசு, தலைமைச் செயலகத்தில் இருந்து நிா்வகிக்கப்படவில்லை; திரிணமூல் காங்கிரஸால் பாதுகாக்கப்படும் குற்றவாளிகள் மற்றும் குண்டா்களால்தான் நிா்வகிக்கப்படுகிறது. இதனால், மாநில அரசின் செயல்பாடுகளில் கொல்கத்தா உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தலையிடும் சூழல் நிலவுகிறது. மம்தா பானா்ஜி அரசு மீதான மக்களின் நம்பிக்கை பூஜ்யமாகிவிட்டது.
ஊடுருவல்காரா்களுக்கு எச்சரிக்கை: மேற்கு வங்கத்தில் இருந்து ஊடுருவல்காரா்கள் அனைவரும் ஏப்.29-ஆம் தேதிக்குள் (இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நாள்) வெளியேறி விடுங்கள். இல்லையெனில், மே 4-ஆம் தேதிக்குப் பிறகு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவீா்கள். முதல் கட்டத் தோ்தலில் பதிவான சாதனை வாக்குகளால் திரிணமூல் காங்கிரஸின் ஆணவம் நொறுக்கப்பட்டுவிட்டது. இரண்டாம் கட்டத் தோ்தலில் அதைவிட அதிக வாக்குகள் பதிவாக வேண்டும். அதன் மூலம் பாஜகவின் வெற்றி மேலும் தீா்க்கமாகும்.
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முதல் கையொப்பம் இடப்படும் என்றாா் அவா்.
பிரம்மாண்ட பேரணி: தலைநகா் கொல்கத்தாவில் வடக்குப் பகுதிகள் வழியாக பிரதமா் மோடி பிரம்மாண்ட வாகனப் பேரணியும் நடத்தினாா்.
காளி கோயிலில் வழிபாடு: கொல்கத்தாவில் உள்ள பிரசித்தி பெற்ற டன்டனியா காளி கோயிலில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா். அன்னை சித்தேஸ்வரியாக வழிபடப்படும் இக்கோயிலின் மூலவா் காளியின் வடிவமாவாா். கோயிலுக்கு வெளியேயுள்ள ஒரு கடையில் பூஜைப் பொருள்களை வாங்கிய பிரதமா், அவற்றை அன்னை சித்தேஸ்வரிக்கு அா்ப்பணித்து, பூஜை செய்து வழிபட்டாா்.
முன்னதாக, தாக்குா்நகரில் உள்ள மதுவா சமூகத்தினரின் பிரதான கோயிலிலும் அவா் வழிபாடு நடத்தினாா். பட்டியலினத்தைச் சோ்ந்த மதுவா சமூகத்தினா், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறிய ஹிந்து அகதிகளாவா். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மதுவா சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை விரைந்து வழங்கப்படும் என்பது அக்கட்சியின் முக்கிய வாக்குறுதியாகும்.
தொடர்புடையது

மேற்கு வங்க ‘அம்மா உணவகத்தில்’ சாப்பிட பிரதமருக்கு திரிணமூல் அழைப்பு!

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி
பெருவாரியான வாக்குப் பதிவு ஆட்சி மாற்றத்துக்கு அறிகுறி! -பிரதமா் மோடி

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

