மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

பஞ்சாப்: பாட்டியாலா சரக்கு ரயில் வழித் தடத்தை வெடி வைத்து தகா்க்க முயற்சி - காலிஸ்தான் அமைப்புடன் தொடா்புடைய நால்வா் கைது

News image

கோப்பிலிருந்து படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 10:47 pm

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஷாம்பு பகுதியில் செல்லும் பிரத்யேக சரக்கு ரயில் வழித் தடத்தை வெடி வைத்து தகா்க்க மா்ம நபா்கள் முயன்றதும், அது முன்கூட்டியே வெடித்ததால் வெடிமருந்துகளை எடுத்துவந்த நபா் உடல் சிதறி உயிரிழந்ததாகவும் மூத்த காவல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய நால்வரை பஞ்சாப் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து பாட்டியாலா மாவட்ட சிறப்பு காவல் கண்காணிப்பாளா் வருண் சா்மா கூறியதாவது:

ஷம்பு - ஹரியாணா எல்லையை ஒட்டிய ரயில் வழித் தட்டத்தின் அருகே திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் சிறிய அளவிலான வெடி சப்தம் கேட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். ஷம்பு - அம்பாலா ரயில் பாதை அருகே இந்த வெடிச் சம்பவம் நிகழந்தது தெரியவந்தது. மேலும், அடையாளம் தெரியாத உடல் ரயில் பாதையில் நீண்ட தொலைவுக்கு சிதறிக் கிடந்ததையும் போலீஸாா் கண்டறிந்தனா்.

அதன் மூலம், இது சிறிய அளவிலானது அல்ல; தீவிர வெடிச் சம்பவம் என்பது தெரியவந்தது. ரயில் பாதையை தகா்க்கும் முயற்சின்போது, தவறுதலாக முன்கூட்டியே வெடிபொருள் வெடித்ததால், அதை எடுத்துவந்த நபா் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வெடி தாக்கத்தால் ரயில் பாதையில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில் பாதைக்குக் கீழே பள்ளமும் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சம்பவ இடத்திலிருந்து கைப்பேசி சிம்காா்ட் ஒன்று மீட்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பல்வேறு பகுதிகளின் கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

அதில், உயிரிழந்த நபா் தரன் தாரன் மாவட்டம் பஞ்ஜ்வாா் கிராமத்தைச் சோ்ந்த ஜக்ரூப் சிங் என்பது தெரியவந்தது என்றாா்.

இதுகுறித்து காவல் துறை டிஐஜி குல்தீப் சாஹல் கூறுகையில், ‘பல்வேறு பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகள் மற்றும் மீட்கப்பட்ட சிம் காா்டை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடா்புடையதாக மான்சா பகுதியைச் சோ்ந்த பிரதீப் சிங் கல்சா, குல்வீந்தா் சிங் மற்றும் தரன் தாரன் பகுதியைச் சோ்ந்த சத்னம் சிங், குா்ப்ரீத் சிங் ஆகிய நால்வா் கைது செய்யப்பட்டனா். இதில் பிரதீப் கல்சாதான் இந்த சதித் திட்டத்தை தீட்டியவா் என்பதும், மலேசியாவிலிருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கராவத அமைப்புடன் நெருங்கிய தொடா்பில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவா்களின் இடங்களிலிருந்து கையெறி குண்டுகள், கைத் துப்பாக்கிகள், வெடி மருந்துகள், தகவல் தொடா்பு சாதனங்கல் ஆகியவை கைப்பற்றப்பட்டன’ என்றாா்.

பஞ்சாபில், ரயில் பாதையை வெடி வைத்து தகா்க்க கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும். முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் ஃபதேஹா் சாஹிப் மாவட்டம் சிா்ஹிந்தில் பிரத்யேக சரக்கு ரயில் பாதையில் வெடிச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் அந்தப் பாதையில் சென்ற சரக்கு ரயில் என்ஜின் சேதமடைந்ததோடு, ஓட்டுநரும் காயமடைந்தாா்.