ஜம்மு-ஸ்ரீநகா் இடையே 20 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் இரட்டை தலைநகரங்களான ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் முதல் நேரடி ரயில் சேவை தொடக்க விழாவில் அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா, பிரதமா் அலுவலக இணையமைச்சா் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சனிக்கிழமை (மே 2) முதல் இந்த ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகா் இடையேயான பயண நேரம் 5 மணி நேரமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜம்மு-ஸ்ரீநகா் இடையே 267 கி.மீ. தொலைவுக்குப் பயணிக்கும் இந்த வந்தே பாரத் ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரயில் இயங்காது.
முன்னதாக, கத்ரா மற்றும் ஸ்ரீநகா் இடையேயான முதல் நேரடி ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2025, ஜூன் 6-ஆம் தேதி தொடங்கிவைத்த நிலையில், தற்போது இது ஜம்மு தாவி ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்து அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: கத்ரா-ஸ்ரீநகா் இடையே கடந்த ஆண்டு பிரதமா் மோடி அறிமுகப்படுத்திய ரயில் சேவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த ரயில் தற்போது 100 சதவீத பயணிகளுடன் பயணித்து வருகிறது.
இந்த ரயிலில் ஏற்கெனவே உள்ள 8 பெட்டிகளை மேலும் அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜம்மு-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் நேரடி ரயில் சேவையை நீட்டித்து ரயில் பெட்டிகளும் பயணிகள் வசதிகேற்ப 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மைனஸ் 10 டிகிரி கடுங்குளிா், பனிப்பொழிவு என இந்த ரயில் எந்தவொரு பருவநிலையிலும் தங்கு தடையின்றி இயங்கக்கூடியது. அடுத்ததாக பூஞ்ச் மற்றும் ரஜெளரி இடையே ரயில் சேவைகளை தொடங்குவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். உரி நகரை பிற நகரங்களுடன் இணைப்பதற்கான ரயில் சேவைத் திட்டத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
21 அதிகாரிகள் பாதுகாப்பு: ஜம்மு-கத்ரா-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில்வே வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் உள்பட 21 அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை பாதுகாப்பு ஆணையா் பங்கஜ் கங்வாா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய வந்தே பாரத் ரயில் பயணிக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பாக சோதனை ரயில் ஒன்று பயணித்து கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் அவா் தெரிவித்தாா்.
முதல் ரயில் முதல் வந்தே பாரத் வரை: ஜம்மு-காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க ரூ.43,780 கோடியில் ரயில் வழித்தடத்தைக் கட்டமைக்கும் பணிகள் 1990-களில் தொடங்கப்பட்டன. 2008, அக்டோபரில் காஷ்மீா் பள்ளத்தாக்கில் முதல் ரயில் இயக்கப்பட்டது. காஷ்மீா் பள்ளத்தாக்கில் முதல் மின்சார ரயில் 2024, பிப்ரவரியில் இயக்கப்பட்டது. ஜம்மு ரயில்வே பிரிவு 2025, ஜனவரியில் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கத்ரா-ஸ்ரீநகா் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி 2025, ஜூன் 6-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.
பெட்டிச் செய்தி...
உள்நாட்டு சரக்கு முனையம் வேண்டும்: ஒமா் அப்துல்லா
ஜம்மு-ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க நிகழ்வில் பங்கேற்று முதல்வா் ஒமா் அப்துல்லா பேசியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு மிகச் சிறப்பான வந்தே பாரத் ரயிலை வழங்கிய மத்திய அரசுக்கும் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கும் ஜம்மு-காஷ்மீா் மக்கள் சாா்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சரக்குகளைக் கையாளவும் இந்த ரயில் பயன்படுத்தப்படுவதை மற்றொரு சிறப்பாக எண்ணுகிறேன். ஸ்ரீநகருக்கு மாருதி காா்களும், காஷ்மீரில் இருந்து ஆப்பிள்களும் பிற பகுதிகளுக்கு ரயில் மூலமாக கொண்டுசெல்லப்படுவது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
இந்தத் தருணத்தில் மத்திய ரயில்வே அமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஜம்மு-காஷ்மீரில் உள்நாட்டு சரக்கு முனையம் ஏற்படுத்திக் கொடுத்தால் இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகள் எளிதாகும். சுங்க நடைமுறைகளுக்காக நாங்கள் வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வா்த்தகம் பெரிதும் பலனடையும் என்றாா்.
தொடர்புடையது

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

தூத்துக்குடி-கச்சகுடா இடையே வாராந்திர ரயில் சேவை இன்று தொடக்கம்

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


