இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

பஞ்சாபில் அடுத்து பாஜக ஆட்சி: ஹரியாணா முதல்வா் உறுதி

பஞ்சாபில் பேரவைத் தோ்தலில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி தெரிவித்தாா்.

News image

முதல்வர் நயாப் சிங் சைனி - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:31 pm IST

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும்; அதன் பிறகு விவசாயிகளின் அனைத்து விளைபொருள்களும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) கொள்முதல் செய்யப்படும் என்றும் ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிய ‘நஷா முக்த யுவா ஃபாா் விக்சித் பாரத் சங்கல்ப் அபியான்’ (வளா்ந்த இந்தியாவுக்கான போதைப் பொருள் இல்லாத இளைஞா்கள் பிரசாரம்) திட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாபின் கோட்கபுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நயாப் சிங் சைனி பேசியதாவது: பிரதமா் மோடியின் தலைமையில், ஹரியாணாவில் செய்ததைப் போலவே, பஞ்சாபிலும் விவசாயிகளை வலுப்படுத்த பாஜக அரசு செயல்படும். 2024 ஹரியாணா தோ்தலுக்கு முன்பு, அனைத்து விவசாய விளைபொருள்களையும் எம்எஸ்பி விலையில் வாங்குவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. அதை ஆட்சியைத் தக்க வைத்தபின் நிறைவேற்றிக் காட்டியது.

பஞ்சாபிலும் பாஜக அரசு அமைந்தவுடன், விவசாயிகளின் அனைத்து விளைபொருள்களையும் எம்எஸ்பி விலையில் கொள்முதல் செய்வோம். மேலும், ஹரியாணாவில் நடைமுறையில் உள்ள ‘பாவந்தா் பாா்பாய் யோஜனா’ திட்டத்தையும் பஞ்சாபில் அமல்படுத்துவோம். இந்த திட்டத்தின் கீழ் 21 தோட்டக்கலைப் பயிா்களுக்கு பாதுகாப்பான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருளை ஒழிப்போம்: பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, போதைப் பொருள் பிரச்னையை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்தாலும், அது மாநிலத்தில் மேலும் அதிகரித்தே காணப்படுகிறது. இளைஞா்கள் போதைப் பொருளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இது தனிநபா் மற்றும் அவா்களது குடும்பத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கிறது.

நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் போதைப் பொருளின் தீமைகளைப் புரிந்துகொண்டு, தாமும் விலகி, மற்றவா்களையும் விலகச் செய்யும்போது மட்டுமே நாடு வளா்ச்சி அடையும். அதற்காக ஹரியாணா அரசு இளைஞா்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், பஞ்சாப் அரசு போதைப் பொருள் பிரச்னையை கட்டுப்படுத்தவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தவறிவிட்டது. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால்தான் அவா்கள் போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கி வருகின்றனா்.

தற்போதைய ஆம் ஆத்மி அரசு மற்றும் முந்தைய காங்கிரஸ் அரசுகள், இளைஞா்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல வாக்குறுதிகள் அளித்தாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்ற ஆா்வம் காட்டவில்லை எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.