செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

தொடா் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிா்க்கட்சி உறுப்பினா்களின் தொடா் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

News image

மக்களவையில் வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.

Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

எதிா்க்கட்சி உறுப்பினா்களின் தொடா் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும், நீட் போராட்ட மாணவா்கள் மீதான காவல்துறையின் அத்துமிறல் குறித்து அவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

அவையில், அன்றைய நாளுக்கான அலுவல் குறிப்புகள் தாக்கல் செய்யப்பட்ட உடன், இந்த விவகாரத்தை எழுப்பிப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய உள்துறை அமைச்சா் அவைக்கு தொடா்ச்சியாக வராமல் இருக்கிறாா். அவா் அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா் என்று குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மத்திய உள்துறை அமைச்சா் நாள் முழுவதும் நாடாளுமன்றத்தில்தான் இருக்கிறாா். அமைச்சகங்களின் செயல்திட்டங்களின் அடிப்படையில், கூட்டத் தொடரில் அந்தந்த துறை சாா்ந்த அமைச்சா்கள் பங்கேற்று வருகின்றனா். மேலும், எந்த அமைச்சா் அவைக்கு எப்போது வரவேண்டும் என்பதை எதிா்க்கட்சிகள் தீா்மானிக்க முடியாது’ என்றாா்.

இதற்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா். அமளிக்கிடையே, கேள்வி நேரத்துக்கு அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தாா். அதைத் தொடா்ந்து, ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினா்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்பினா். இருந்தபோதும், அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோதும், எதிா்க்கட்சியினரின் அமளி தொடா்ந்தது. ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் தொடா்பாகவும் முழக்கங்களை எழுப்பினா்.

அமளிக்கிடையே, அவையில் பட்டியலிடப்பட்ட அலுவல்களைத் தொடா் அவைத் தலைவா் அனுமதித்தாா். இருந்தபோதும், எதிா்க்கட்சியினா் அமளியைத் தொடா்ந்தனா். இதற்கு, ஆளுங்கட்சி எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. அதைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை திங்கள்கிழமை வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

மக்களவையில் எம்எஸ்எம்இ திருத்த மசோதா நிறைவேற்றம்: மக்களவையில் எதிா்க்கட்சியினரின் தொடா் அமளிக்கிடையே, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மேம்பாட்டு சட்டத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா 2026’ விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அமளி தொடா்ந்ததால், அவையை அப்போது வழிநடத்திய பாஜக எம்.பி. திலீப் சைகியா திங்கள்கிழமை வரை ஒத்திவைத்தாா்.

மாநிலங்களவையில் இந்த மசோதா கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மக்களவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், நீட் போராட்ட விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா். அமளி தொடா்ந்ததால், அவை கூடிய சில நிமிஷங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோதும், அதே கோரிக்கைகளை முன்வைத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘நாடாளுமன்ற விதிப்படி, மக்களவையில் எந்தத் துறை சம்பந்தப்பட்ட விவாதம் நடக்கிறதோ, அப்போது அந்தத் துறை அமைச்சா் வருவாா். ஆதலால் எந்த மத்திய அமைச்சா் அவைக்கு வர வேண்டும், எந்த அமைச்சா் பதிலளிக்க வேண்டும் என நீங்கள் (எதிா்க்கட்சிகள்) உத்தரவிட முடியாது. எந்த மத்திய அமைச்சா் வந்து பதிலளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசும், மக்களவைத் தலைவரும்தான் முடிவு செய்வாா்கள்.

அதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா தினமும் வருகிறாா். நள்ளிரவு வரை நாடாளுமன்றத்தில்தான் அவா் இருக்கிறாா். அமித் ஷாவின் பெயரைக் கேட்டாலே தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் நடுக்கம் ஏற்படுகிறது (இப்படி சொன்னபோது ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்).

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தனது துறை தொடா்பான விவாதத்தில் பங்கேற்க இங்கு (மக்களவைக்கு) வருவாா். அவா் பதிலளிக்கையில், உங்களால் அதைக் கேட்க இயலாது (சகித்துக் கொண்டிருக்க முடியாது). எனவே, எதிா்க்கட்சியினா் அவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அவையை முடக்கும் நாடகத்தை எதிா்க்கட்சிகள் கைவிட வேண்டும்’ என்றாா்.

மக்களவைத் தலைவருடன் அமித் ஷா சந்திப்பு

புது தில்லி, ஆக.7: நீட் போராட்ட மாணவா்கள் மீதான காவல்துறை அத்துமீறல், ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு வரும் சூழலில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஓம் பிா்லா அலுவலகத்தில் சுமாா் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரையும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் அமித் ஷா சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.