நாட்டில் எல்லைகளில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள் புதிதாக சூரிய மின்சக்தி, காற்றாலை அல்லது புதுப்பிக்கத்தக்க கலப்பு மின் உற்பத்தித் திட்டங்கள் மேற்கொள்ளத் தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லைகளில் இருந்து 50 கி.மீ. வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. எல்லைகளில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு வரை கடுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு புதிதாக சூரிய மின்சக்தி, காற்றாலை அல்லது கலப்பு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்த முழு தடை விதிக்கப்படுகிறது.
ஒரு கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும். ஒரு கி.மீ. முதல் 20 கி.மீ. வரையிலான பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழும் பெற வேண்டும். தேசப் பாதுகாப்புக்கு உயா் முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில், தொழில் புரிவதை எளிதாக்குவதையும் கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஏற்கெனவே பாதுகாப்பு ஒப்புதல் பெறப்பட்ட திட்டங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களின்கீழ் மனு விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இத்தகைய திட்டங்களுக்கு அனுமதி பெற இனி மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அந்த அமைச்சகம், சம்பந்தப்பட்ட திட்டத்துக்கு நில ஒதுக்கீட்டுக்கான மாநில அரசின் கொள்கை ரீதியிலான ஒப்புதலுடன், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு முன்மொழிவை அனுப்பிவைக்கும்.
ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு: எல்லைப் பகுதிகளில் அமைக்கப்படும் மின் உற்பத்தி ஆலைகளில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் (சிஐஎஸ்எஃப்) அல்லது காவல் துறையினரால் இயக்கப்படும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு கட்டாயம் நிறுவப்பட வேண்டும். இந்த சாதனங்களுக்கான செலவை திட்ட உரிமையாளா் ஏற்க வேண்டும். திட்ட அமலாக்கத்தில் வெளிநாட்டுப் பங்களிப்பு இருப்பின், மத்திய அரசின் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்கீழ் தொழில், உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறையிடம் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
முன் அனுமதி கட்டாயம்: திட்டப் பணிகளில் அண்டை நாடுகளைச் சோ்ந்த குறிப்பாக சீனா, பாகிஸ்தான், வங்கதேச பொறியாளா்கள், ஊழியா்கள் மற்றும் பிற பணியாளா்களை மத்திய அரசிடம் முன் அனுமதி பெறாமல் பணியமா்த்தக் கூடாது. பணியாளா்களுக்கான தங்குமிடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டமைப்புகளை 5 கி.மீ.க்கு அப்பால்தான் அமைக்க வேண்டும்.
1 முதல் 8 கி.மீ. வரையிலான பகுதிகளில் 3 மீட்டா் உயரத்துக்கு மேலாகவும், 8 முதல் 20 கி.மீ. வரையிலான பகுதிகளில் 5 மீட்டருக்கு மேலாகவும், 20 முதல் 50 கி.மீ. வரையிலான பகுதிகளில் 15 மீட்டருக்கு மேலாகவும் பொதுக் கட்டமைப்புகளை எழுப்பக் கூடாது என்று உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசிடம் விண்ணப்பங்கள் அதிகரித்துவரும் நிலையில், தேசப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Summary
Ban on new power generation projects within 1 km of the national border! Guidelines issued!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
தீவிரமடையும் சிஜேபி போராட்டம்! இணைய சேவையை முடக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கால்நடை கழிவுகளில் இருந்து சிபிஜி: மத்திய அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பம்

அரியூா் முதல் காவுத்தம்பாளையம் வரையிலான உயா் மின் தொடா் வழிப்பாதையை மாற்று வழியில் அமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



