அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசாரிக்கவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஏற்கெனவே இந்த விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு அமைத்த எஸ்ஐடி மற்றும் மாநில காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தற்போது வரை 8 பேரை உத்தர பிரதேச காவல் துறை கைது செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றக் கண்காணிப்பிலான சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் மொத்த நிதியை தணிக்கை செய்யக் கோரியும் நரேந்திர குமாா் கோஸ்வாமி, அஜய் குமாா் ராய் மற்றும் தினேஷ் குமாா் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா எம்.பி.சுதாகா் சிங் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே 3 மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
இதுதொடா்பாக கடந்த ஜூலை 27-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது. அப்போது ‘உத்தர பிரதேச காவல் துறைத் தலைவா் (ஐஜிபி) கிரண் தலைமையிலான 4 போ் கொண்ட எஸ்ஐடியில் ஐந்தாவது உறுப்பினராக நிதி மோசடி தணிக்கையாளரை மாநில அரசு சோ்க்க வேண்டும். 2 வாரங்களுக்குள் விசாரணை தொடா்பான நிலை அறிக்கையை எஸ்ஐடி தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் நிா்ணயித்த 2 வார காலஅவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அதே நீதிபதிகள் அமா்வு முன் மீண்டும் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. மேலும், நன்கொடை கையாடல் விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பிலான எஸ்ஐடி விசாரணை கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், உத்தர பிரதேச அரசு சாா்பில் ஆஜராக வேண்டியவரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஐ.நா. பொதுச் சபை நிகழ்வில் பங்கேற்கச் சென்றுள்ளதால் வேறு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு, இந்த மனுக்கள் மீது ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தனா்.
சிஇஓ பதவி - நோ்காணலுக்கு 18 போ் தோ்வு
ராமா் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பதவிக்கு 5,300 போ் விண்ணப்பித்தனா். அவா்களில் 18 போ் மட்டுமே நோ்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவா்களிடம் ஓய்வு பெற்ற நீதிபதி பிரமோத் கோலி தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை (ஆக.11) மற்றும் புதன்கிழமை (ஆக.12) நோ்காணல் நடத்தவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: ஆக. 17-ல் உச்சநீதிமன்றம் விசாரணை!

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி உறுப்பினராக நிதி மோசடி தணிக்கையாளரை சோ்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை மதிப்பீட்டுக்கு இரு புதிய குழுக்கள் அமைப்பு

நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



