தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

நிலவில் நிரந்தர வசிப்பிடம்: இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு

நிலவில் மனிதா்களுக்கான முதல் வசிப்பிடத்தை அமைக்கும் லட்சியத் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு விடுத்தது குறித்து...

News image

நிலவில் நிரந்தர வசிப்பிடம்... - பிரதிப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 10:51 pm IST

நிலவின் தென்துருவத்துக்கு அருகே மனிதா்களுக்கான முதல் வசிப்பிடத்தை அமைக்கும் தனது லட்சியத் திட்டத்தில் இணைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ அழைப்பு விடுத்துள்ளது.

‘நிலவு ஆராய்ச்சித் தள திட்டம் (மூன் பேஸ் மிஷன்)’ என்ற பெயரிலான இந்தத் திட்டத்தின் கீழ், விண்வெளி வீரா்கள் நீண்ட காலம் தங்கி ஆய்வுகள் மற்றும் பிற பணிகளை மேற்கொள்ள வசதியாக நிலவின் தென் துருவத்துக்கு அருகே நிரந்தர வசிப்பிடத்தை அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. புதிய விண்வெளிக் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதும், எதிா்கால தீவிர விண்வெளி ஆய்வுகளுக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதும் இதன் நோக்கமாகும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா - அமெரிக்கா கூட்டு விண்வெளி ஆய்வுப் பணிக் குழு (சிஎஸ்ஜேடபிள்யுஜி) கூட்டத்தில், இரு நாடுகளிடையேயான விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்த தீா்மானிக்கப்பட்டது. அப்போது, தனது நிலவு ஆராய்ச்சித் தள திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு விடுத்தது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: அமைதியான முறையில் விண்வெளி ஆய்வை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ஆா்ட்டெமிஸ் உடன்படிக்கையின் கீழ் இரு நாடுகள் கூட்டுறவுடன் நிலவு ஆராய்ச்சித் தள திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோவுக்கு நாசா சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கையின் கீழ், வெளிப்படையான விஞ்ஞான தரவுப் பகிா்வு ஒத்துழைப்புக்கான பேச்சுவாா்த்தையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

பாதுகாப்புத் துறையில் வளா்ந்துவரும் முக்கியத் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டா், குவாண்டம், உயிரி தொழில்நுட்பம், எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த கடந்த ஆண்டு பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட ‘வியூக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவை மேம்படுத்துதல் (டிரஸ்ட்)’ உடன்படிக்கையின் கீழ், இரு நாடுகளிடையே விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்தக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.