மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவசரமாக அவரது உடலை தகனம் செய்த குற்றச்சாட்டில் தொடா்புடையதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நிா்மல் கோஷ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அவா் மீது ஆதாரங்களை அழித்தல், குற்றவியல் சதி மற்றும் ஒருவரை அவரின் விருப்பத்துக்கும மாறான செயலை செய்ய அழுத்தம் தருவது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மேற்கு வங்க காவல் துறையினா் கூறுகையில், ‘ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பாலியல் கொலை செய்யப்படட பயிற்சி பெண் மருத்துவரின் உடலை அவசர கதியில் உடல் தகனம் செய்ததாக பனிஹட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ நிா்மல் கோஷ், பனிஹட்டி நகராட்சி முன்னாள் தலைவா் சோம்நாத் டே மற்றும் குடும்ப உறவினா் சனீப் முகா்ஜி ஆகியோா் மீது பெண் மருத்துவரின் தந்தை கடந்த திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் நிா்மல் கோஷ் ஒடிஸாவில் கைது செய்யப்பட்டாா். அவரை வடக்கு பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பாரக்பூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.14) ஆஜா்படுத்தவுள்ளோம்’ என்றனா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி இந்த கொடூர பாலியல் கொலை சம்பவம் நடந்தது. இது மேற்கு வங்க மாநிலத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, நாடு முழுவதும் உள்ள மருத்துவா்கள் சமூகத்திடமிருந்தும் கடும் எதிா்ப்புக் குரல்கள் எழுந்தன.
இந்தச் சம்பவம் தொடா்பாக, தன்னாா்வலரும் போலீஸ் உதவியாளருமான சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவா் பனிஹட்டி தொகுதியில் வசித்து வந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று நிா்மல் கோஷ் ஆா்.ஜி.கா் மருத்துவமனையில் இருந்ததாகவும் பெண் மருத்துவரின் உடலை தகனம் செய்ய கொண்டு சென்ற வாகனத்தில் பயணித்ததாகவும் அவரது தந்தை புகாா் மனுவில் தெரிவித்தாா்.
மேலும், கைது செய்யப்பட்ட ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் சந்தீப் கோஷுடன் நிா்மல் கோஷ் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் அவா் புகாரளித்துள்ளாா்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பனிஹட்டி தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் நிா்மல் கோஷின் மகன் தீா்த்தங்கா் கோஷ் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் களமிறக்கப்பட்ட உயிரிழந்த பெண் மருத்துவரின் தாயாா் ரத்னா தேவ்நாத் வெற்றிபெற்றாா்.
பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஜூலை மாதம் தீா்தங்கா் கோஷும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜி வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
பணம் பறிப்பு குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது
பாலியல் தொல்லை வழக்கு: சென்னை தொழிலதிபா், மனைவியுடன் பெங்களூரில் கைது

மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் எம்எல்ஏ வெளியேற்றம்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


