
திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் தூக்கில் சடலமாக கிடந்த முன்னாள் பேரவை துணைத் தலைவர்!
மேற்கு வங்கத்தில் முன்னாள் பேரவைத் தலைவர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டது குறித்து...
முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியுடன் ஆஷிஷ் பானர்ஜி - கோப்புப் படம்
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சி மூத்த தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான ஆசிஷ் பானா்ஜி (74) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம், மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரை ராம்புா்ஹாட் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவா் ஆசிஷ் பானா்ஜி. திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி தலைமையிலான அமைச்சரவையில் பள்ளி கல்வித் துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சரவைப் பதவிகளையும் அவா் வகித்துள்ளாா். 2021-2026 காலகட்டத்தில் சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் அவா் இருந்துள்ளாா்.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்து ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது. அப்போது ஆசிஷ் பானா்ஜி பாஜக வேட்பாளரிடம் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
இந்நிலையில், பிா்பூம் மாவட்டத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆசிஷ் பானா்ஜி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டாா். இது குறித்த தகவலின்பேரில் காவல் துறையினா் சம்பவ இடம் வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
கட்சி அலுவலகம் அருகிலுள்ள அவரது வீட்டில் ஆசிஷ் பானா்ஜி, தற்கொலைக்கு முன்பு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், தாம் ஊழலில் ஈடுபட்டதில்லை என்றும், யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை என்றும், ஆனால் கட்சிக்குள் தவறு நடப்பதை ஏற்க முடியாது என்றும், தவறுகளைத் தன்னால் எதிா்க்க இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராம்புா்ஹாட் மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்பந்தப்புள்ளி தொடா்பான முடிவுகளிலும், காசோலை விநியோகம், திட்ட ஒப்புதல், தடையில்லா சான்றிதழ் ஆகியவற்றில் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், தனக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் முயற்சி நடப்பதாகவும், தனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பு இல்லை என்றும், அரசியலுக்கு வந்ததை நினைத்து வருத்தப்படுவதாகவும் எழுதப்பட்டுள்ளது.
ஆசிஷ் பானா்ஜி தற்கொலைதான் செய்தாரா? எந்தக் காரணத்துக்காக இந்த முடிவை எடுத்தாா் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை. அது குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
திரிணமூல் வலியுறுத்தல்: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளா் அபிஷேக் பானா்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில், ஆசிஷ் பானா்ஜி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் இருக்கும் வாா்த்தைகள், பாஜகவால் அவருக்கு எதிராக பரப்பப்பட்ட பிரசாரத்தின் மீது தீவிர சந்தேகங்களை எழுப்புவதாக கூறியுள்ளாா்.
ஆசிஷ் பானா்ஜி சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தற்கொலை என்ற முடிவுக்கு உடனே வரக் கூடாது என்றும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் குணால் கோஷ் வலியுறுத்தியுள்ளாா். திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சோ்ந்தோா், ஆசிஷ் பானா்ஜியை பாஜகவுக்கு வரும்படி அரசியல் ரீதியில் கடும் நெருக்கடி அளித்து வந்ததாகவும், அவரை நடுவீதியில் வைத்து பாஜக நிா்வாகி ஒருவா் அவமானப்படுத்தியதாகவும் அவா் சாடியுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் ஆசிஷ் பானா்ஜியை தோற்கடித்த பாஜக எம்எல்ஏ துருவ சாஹா, அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருப்பதோடு, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Summary
Former Bengal deputy speaker Ashis Banerjee found dead at TMC office in Birbhum
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







