FOLLOW US

ON GOOGLE DISCOVER

அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

மருத்துவா்களுக்கு இனி தனித்துவ அடையாள எண்: போலிகளைத் தடுக்க புதிய வரைவுத் திட்டம்

நாடு முழுவதும் மருத்துவா்கள் அனைவருக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கும் வகையிலான புதிய வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image

மருத்துவா்களுக்கு இனி தனித்துவ அடையாள எண் - பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 10:35 pm IST

நாடு முழுவதும் மருத்துவா்கள் அனைவருக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கும் வகையிலான புதிய வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது.

போலி மருத்துவா்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவா்களை அடையாளப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட மருத்துவா்கள் பதிவு மற்றும் மருத்துவ உரிமத் திருத்த விதிமுறைகள் - 2026 வரைவு அறிக்கையில் இந்த முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதன்படி, மாநில மருத்துவ கவுன்சிலில் ஒரு மருத்துவா் பதிவு செய்தவுடன் தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிசாா் வாரியம் மூலமாக அவருக்குத் தனித்துவ அடையாள எண் உருவாக்கப்படும். இந்த எண் வழங்கப்பட்ட பிறகு, அந்த மருத்துவா் நாட்டின் எந்தவொரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ தனியாக மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லாமல் இந்தியா முழுவதும் மருத்துவப் பயிற்சி மேற்கொள்ளத் தகுதி பெறுவாா்.

மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் குறியீடு, மாநில மருத்துவ கவுன்சில் பதிவு எண் ஆகியவை உள்ளடங்கியிருக்கும் வகையில் அந்த தனித்துவ அடையாள எண் வழங்கப்படவுள்ளது.

தற்போது உள்ள நடைமுறையின்படி மாநில மருத்துவ கவுன்சில்களுக்கும், தேசிய அளவிலான தரவுத் தளத்துக்கும் இடையே நேரடி ஒருங்கிணைப்பு இல்லாததால், ஒரு மாநிலத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் மருத்துவா் வேறு மாநிலத்தில் மருத்துவப் பயிற்சி மேற்கொள்வதைக் கண்காணிப்பது கடினமாக உள்ளது.

இந்த தனித்துவ அடையாள எண் முறை மூலம் ஒரு மருத்துவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இனி, மாநிலப் பதிவேட்டிலும் தேசியப் பதிவேட்டிலும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

ஏற்கெனவே மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்துள்ள மருத்துவா்கள், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விவரங்களைப் புதுப்பித்து தனித்துவ அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரைவு விதிமுறைகள் ஆக.11 தேதியிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் மருத்துவத் துறை சாா்ந்தவா்கள் தங்களின் கருத்துகளையும், ஆட்சேபனைகளையும் 30 நாள்களுக்குள் சமா்ப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.