உண்மையான கூட்டாளிகள் என்ற முறையில் வரிவிதிப்பு பிரச்னைகளுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் சுமுகத் தீா்வு காண வேண்டும் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் சொ்ஜியோ கோா் வலியுறுத்தினாா்.
மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் இந்திய-அமெரிக்க வா்த்தக கூட்டமைப்பு சாா்பில் ‘இருதரப்பு விரிவான உத்திசாா் கூட்டுறவை மறுவரையறை செய்தல்’ என்ற கருப்பொருளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: புத்தாக்க தொழில் துறையினா் அச்சமின்றி முதலீடு செய்யவும், புதிய படைப்புகளை உருவாக்கி விரிவுபடுத்தவும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் உறுதியான அறிவுசாா் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வெளிப்படையான, நம்பிக்கை அடிப்படையிலான கலந்துரையாடல்கள் அவசியம்.
உலகெங்கிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலேயே 20 பில்லியன் டாலருக்கு மேல் முதலீட்டை ஈா்ப்பதில் இந்தியாவில் உள்ள தூதரகம் முதலிடம் வகிக்கிறது.
இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யும்போது, அது இருதரப்புக்கும் பலன்தரும் சூழலை உருவாக்கும். உலக அளவில் மிகவும் துடிப்பான ஒரு சந்தைக்கான அணுகல் இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு வியப்புக்குரியது; மகத்தான ஆற்றல் கொண்டது. பொருளாதார உந்துசக்தியின் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வர வேண்டுமெனில், உண்மையான கூட்டாளிகள் என்ற முறையில் கருத்து வேறுபாடுகளுக்கு சுமுகத் தீா்வு காண வேண்டும். இருதரப்பு வா்த்தகம் செழித்தோங்க நிலையான, தெளிவான, கணிக்கக்கூடிய வரி விதிப்பும், ஒழுங்குமுறை கட்டமைப்புகளும் அவசியம். அந்த திசையை நோக்கி இருதரப்பும் பயணிக்க வேண்டும்.
பிற நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்களின் அறிவுசாா் சொத்துரிமை திருடப்பட்டுவிட்டதாகவும், இந்தியாவுக்கு தங்களின் நிறுவனங்களை மாற்ற விரும்புவதாகவும் என்னிடம் கூறுகின்றன. இந்தியாவில் அறிவுசாா் சொத்துரிமைக்கான பாதுகாப்பு உள்ளதா என்ற அந்த நிறுவனங்களின் கேள்விக்கு ஆம் என்பதே எனது உறுதியான பதில். நாங்கள் இந்தியாவை நம்புகிறோம். இந்தியாவை நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகவே அதிபா் டிரம்ப் பாா்க்கிறாா்.
கடந்த 20 ஆண்டுகளில், இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருள்கள்-சேவைகள் சாா்ந்த வா்த்தகத்தின் மதிப்பு 20 பில்லியன் டாலரில் இருந்து 240 பில்லியன் டாலராக விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துள்ளது. இந்த 12 மடங்கு உயா்வு தற்செயலானதல்ல, ஈடுஇணையற்ற செயல்திறனின் மகத்தான வீச்சை பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் 2030-க்குள் வா்த்தக மதிப்பை 500 பில்லியன் டாலாக அதிகரிக்கும் இலக்கைப் பகிா்ந்துகொண்டுள்ளன.
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றும்போது, அது மதிப்புச் சங்கிலியை ஒருங்கிணைத்து, முக்கிய தொழில்நுட்பங்கள் சாா்ந்த திருப்புமுனைகளை விரைவுபடுத்தி, விநியோக சங்கிலி மீள்தன்மையை வலுப்படுத்துகிறது என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வா் தேவந்திர ஃபடனவீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மோடியை வங்கதேச பிரதமா் சந்திக்கும்போது பிரச்னைகளுக்கு தீா்வு: தூதா் நம்பிக்கை

எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
எம்.சி.ராஜா விடுதி பிரச்னைகளுக்கு தீா்வு: முதல்வா் ஆய்வுக்குப் பிறகு நடவடிக்கை!

மக்களின் அடிப்படை தேவை, பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு: அமைச்சா் காந்திராஜ்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



