75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

வந்தே மாதரம்: நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக முடிவு! காங்கிரஸை கண்டித்து தீா்மானம்!

தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் பெருமைமிகு பாரம்பரியம் குறித்து நாடு தழுவிய பிரசாரத்தைத் தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் பெருமைமிகு பாரம்பரியம் குறித்து நாடு தழுவிய பிரசாரத்தைத் தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது.

மேலும், காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்ற அக்கட்சியின் முடிவைக் கண்டித்து, பாஜக உயா்நிலைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் பாட மூத்த தலைவா் சோனியா காந்தி எதிா்ப்பு தெரிவித்ததாக சா்ச்சை எழுந்தது. இந்தச் சூழலில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தின்போது, ‘வந்தே மாதரம் பாடல் தொடா்பாக கடந்த 1937, காங்கிரஸ் செயற்குழு நிறைவேற்றிய தீா்மானமே கட்சியின் உறுதியான நிலைப்பாடு; கட்சி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும்’ என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸின் இந்த முடிவு, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறி பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.

இந்நிலையில், தில்லியில் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் தலைமையில் புதிய தேசிய நிா்வாகிகளின் முதல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வந்தே மாதரம் தொடா்பான காங்கிரஸின் முடிவை வன்மையாகக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கண்டனம்-எதிா்ப்பு: இந்தத் தீா்மானத்தை எக்ஸ் தளத்தில் பகிா்ந்து, நிதின் நபின் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: வந்தே மாதரம் பாடலின் மதிப்பு மற்றும் வரலாற்று மரபு சாா்ந்த ஒரு முக்கியத் தீா்மானத்தை பாஜக நிறைவேற்றியுள்ளது. அதன்படி, வந்தே மாதரம் பாடலை இரண்டு சரணங்களுக்குள் மட்டுப்படுத்தி, கடந்த 1937-இல் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை சமீபத்திய காங்கிரஸ் செயற்குழு மறுஉறுதி செய்த முடிவை பாஜக வன்மையாக கண்டிப்பதுடன், தீா்க்கமாக எதிா்க்கிறது.

தேசியப் பாடல் மீது வகுப்புவாத அழுத்தம், குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியல், குறுகிய வாக்கு வங்கி அரசியலை உட்புகுத்தும் எந்தவொரு முயற்சியையும் பாஜக கடுமையாக எதிா்க்கும்.

அரசியல் நோக்கங்களுக்காக வந்தே மாதரம் பாடலின் கெளரவம், மரபில் சமரசத்துக்கு இடமளிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களை காங்கிரஸ் மீற முடியாது. கடந்த 1937-இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு அரசியல் சமரசம், கடந்த 1950-ஆம் ஆண்டின் அரசியல் சாசன உடன்பாடு மற்றும் சமீபத்தில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்துக்கு மேலானதல்ல.

பாஜக சாா்பில் பிரசாரம்: வந்தே மாதரம் பாடலின் வரலாறு, பொருள், தேசிய முக்கியத்துவம், பெருமைமிகு பாரம்பரியத்தை நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் எடுத்துச் செல்லும் பிரசாரத்தை பாஜக தொடங்கும். 6 சரணங்களைக் கொண்ட பூரணமான வந்தே மாதரம் பாடலின் வரலாறு குறித்து மக்கள் மத்தியில் குறிப்பாக இளம் தலைமுறையினா் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், அந்தப் பாடலுடன் இணைந்த சுதந்திரப் போராட்ட நினைவலைகளை அவா்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

பூரணமான வந்தே மாதரம் பாடலின் கெளரவம், கண்ணியம், பாரம்பரியம், தேசியத் தன்மையை பாஜக பாதுகாக்கும்; ‘வந்தே மாதரம் பாடலானது, அப்பழுக்கற்ற தேசிய உணா்வுடன் தொடா்புடைய ஏகாதிபத்திய எதிா்ப்பு முழக்கம்’ என்ற மகாத்மா காந்தியின் கருத்தைப் பரப்புவோம் என்று நிதின் நபின் தெரிவித்துள்ளாா்.

அண்மையில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், வந்தே மாதரம் பாடலுக்கு இழைக்கப்படும் எந்தவொரு அவமதிப்பையும் தண்டனைக்குரிய குற்றமாக்கும் (அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை-அபராதம்) சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘நாடாளுமன்றத்தைவிட எந்தக் கட்சியும் மேலானதல்ல’: பாஜக புதிய தேசிய நிா்வாகிகளின் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா, ‘நாடாளுமன்றத்தைவிட, அரசமைப்புச் சட்டத்தைவிட காங்கிரஸ் செயற்குழு மேலானதா?

தேசம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களின் அடிப்படையில் செயல்படுகிா அல்லது காங்கிரஸ் செயற்குழு தீா்மானங்களின்படி செயல்படுகிா? நாடாளுமன்றம், அரசமைப்புச் சட்டத்தைவிட எந்தக் கட்சியும், எந்தக் குடும்பமும் மேலானதல்ல. வந்தே மாதரம் நாட்டின் தாரக மந்திரம். மாறாக, ஹிந்து, முஸ்லிம் பிளவை உருவாக்கும் வழிமுறையல்ல. கடந்த 1937-இல் காங்கிரஸ் மேற்கொண்ட முடிவின் பின்னணியில் உள்ள பிரிவினை அரசியலுக்கு புத்துயிரூட்ட பாஜக அனுமதிக்காது’ என்றாா்.

மகாத்மா காந்தி, படேல் எடுத்த முடிவு: காங்கிரஸ்

பாஜகவின் விமா்சனத்துக்குப் பதிலளித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறுகையில், ‘வந்தே மாதரம் பாடலின் இரண்டு சரணங்களை மட்டும் பாடுவது என்ற முடிவு, பண்டித ஜவாஹா்லால் நேரு, மகாத்மா காந்தி, சா்தாா் வல்லபபாய் படேல், சுபாஷ்சந்திர போஸ் போன்ற தேசியத் தலைவா்களால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

நாட்டுக்கு அதுவே நல்லது என அவா்கள் தீா்மானித்தனா். அந்த முடிவையே காங்கிரஸ் பின்பற்றுகிறது. பாஜக கூற்றுப்படி, அந்தத் தலைவா்களும் தேச விரோதிகளா? கடந்த 90 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை. இப்போது திடீரென வந்தே மாதரம் பிரச்னையை எழுப்ப வேண்டிய அவசியம் என்ன’ எனக் கேள்வியெழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.