
பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!
பாஜகதான் தங்களது எதிரி என்றும் கூட்டணியை உடைக்க சமாஜவாதி கட்சி விரும்பாது என்றும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பாஜகதான் தங்களது எதிரி என்றும் கூட்டணியை உடைக்க சமாஜவாதி கட்சி விரும்பாது என்றும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் அமைந்துள்ள சமாஜவாதி கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
சமாஜவாதி கட்சி எப்போதுமே கூட்டணிகளை உடைத்ததில்லை. மற்றவர்களுடன் இணைந்து பயணிக்க சமாஜவாதி கட்சி ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு எங்கள் கட்சி எப்போதும் துணைநிற்கும். நாங்கள் எங்கள் கடமையை மதித்து வந்துள்ளோம். பாஜகதான் எங்கள் எதிரி.
சோஷலிஸ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பிற்பட்ட வகுப்பினர், தலித்துகள், சிறுபான்மை இனத்தவர் ஆகியோரின் நலன்களை காக்கக் கூடிய சமூக நீதிக்கு உறுதிபூண்டுள்ள அரசை உத்தர பிரதேசத்தில் அமைப்பதே எங்கள் கட்சியின் நோக்கம்.
பிற்பட்ட வகுப்பினர், தலித்துகள், சிறுபான்மை இனத்தவர் ஆகியோரைக் கண்டு அவர்கள் (பாஜக) பயப்படுகின்றனர். இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு துன்பப்படுகின்றனரோ அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தவர்களாக உருவெடுப்பார்கள்.
பச்சோந்தியைப் போல் நிறம் மாறுபவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதையும் அடிக்கடி மாற்றிக்கொள்கின்றனர். சில நேரங்களில் பண்டிதர் என்ற அர்த்தத்தையும் சில நேரங்களில் பாகிஸ்தான் என்ற அர்த்தத்தையும் அந்த வார்த்தை கொடுக்கிறது.
தற்போது பண்டிகைகள் நெருங்கி வரும் வேளையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் உட்பட அனைத்துப் பொருள்களின் விலையும் கூடியுள்ளது. சர்க்கரை விலை அதிகரிப்பது ஏன் என்பதை அரசு விளக்க வேண்டும்.
ஆட்சியாளர்கள் பெட்ரோலில் கரும்பில் இருந்து எடுக்கக் கூடிய எத்தனாலை லாபத்துக்காக கலக்கின்றனர். தங்கள் லாபத்தை அதிகரிக்க அவர்கள் சர்க்கரை விலையையும் உயர்த்துகின்றனர். இந்தப் பணம் யாருடைய சட்டைப் பைக்கு செல்கிறது என்பதே நமது கேள்வி.
உத்தர பிரதேசத்தில் 15 கோடி பேருக்கு இன்னமும் மானிய விலையில் ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த 15 கோடி பேரின் தனிநபர் வருமானம் எவ்வளவு?
உத்தர பிரதேசத்தில் தொடக்கக் கல்வி திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் எனது தலைமையிலான அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்தது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் மாணவர்களாக இருக்கிறார்கள். மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் தொடக்கப் பள்ளிகளை மேம்படுத்துவதுடன் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுவதையும் உறுதிசெய்யும்.
தற்போதைய பாஜக அரசு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் அநீதியை இழைத்து வருகிறது. பல்வேறு சமூகங்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுகிறது.
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதியுதவி வழங்கப்படும் என்று சமாஜவாதி கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதேபோன்ற வாக்குறுதிகளை பாஜக தற்போது அளித்து வருகிறது.
உண்மையைப் பேசுவது சிரமமானதாக மாறியுள்ளது. உண்மையைப் பேசுவோர் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பாஜக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். பெரிய வர்த்தகக் குழுமங்களுக்கு அனுகூலமளிக்கும் கொள்கைகளை ஆளுங்கட்சி பின்பற்றுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





