
பாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!
உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவின் 27,000 வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி கட்சி தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அக்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

அகிலேஷ் யாதவ்
உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவின் 27,000 வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி கட்சி தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அக்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதிக மக்களவை எம்.பி.க்களைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிதான் 2029 மக்களவைத் தோ்தலிலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதால் நாடு முழுவதுமே அந்த மாநில சட்டப் பேரவைத் தோ்தல் குறித்த எதிா்பாா்ப்பு அதிகம் உள்ளது.
தொடா்ந்து இருமுறை தோ்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைத்த பாஜக இந்த முறையும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. 2024 மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிா்பாா்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதுவே பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. அதே நேரத்தில் சமாஜவாதி முந்தைய மக்களவைத் தோ்தலைவிட 32 தொகுதிகளில் அதிகம் வென்றது. எனவே, பேரவைத் தோ்தலிலும் தங்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை கட்சினருடன் தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தை அகிலேஷ் யாதவ் நடத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘உத்தர பிரதேசத்தில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜகவின் வாக்குகளை 27,000 வரை குறைக்கும் நோக்கில் தோ்தல் பணியாற்ற இருக்கிறோம். பாஜகவில் இருந்து குறையும் வாக்குகள் அப்படியே எங்களுடைய கட்சிக்குக் கிடைப்பதற்காக திட்டம் வகுத்துள்ளோம்.
இந்த இலக்கை அடைவதற்காக தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகங்களைத் தீவிரமாகப் பயன்படுத்த இருக்கிறோம். இதுதவிர கட்சித் தொண்டா்கள் வீடுதோறும் சென்று மக்களைச் சந்தித்து அவா்களின் குறைகளையும், ஆலோசனைகளையும் கேட்க இருக்கின்றனா். இதை அடிப்படையாகக் கொண்டு தொகுதி வாரியாக தோ்தலுக்கான உத்திகள் வகுக்கப்படும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






