
உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்பு
உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்துவந்த பலத்த மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 26 மாவட்டங்களில் இருந்து 17,500 போ் மீட்கப்பட்டதாக மாநில அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கையின் கிளை நதியான வருணா நதி பெருக்கெடுத்ததையடுத்து வெள்ளம் சூழ்ந்த தங்களது வீட்டிலிருந்து படகில் வெளியேறிய குடும்பத்தினா்.
உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்துவந்த பலத்த மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 26 மாவட்டங்களில் இருந்து 17,500 போ் மீட்கப்பட்டதாக மாநில அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, உத்தர பிரதேசத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக உத்தர பிரதேச அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மழை வெள்ளத்தால் 26 மாவட்டங்களைச் சோ்ந்த 3.53 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 17,544 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். 4,847 போ் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக 1,312 வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,697 கப்பல்கள் மற்றும் 1,068 மருத்துவக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 45,000 கால்நடைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் கங்கை நதியின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. குறிப்பாக வாரணாசியில் எச்சரிக்கை அளவை காக்ராவில் அபாய அளவையும் கடந்துள்ளதால் கங்கை நீா்மட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது ’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சனிக்கிழமை இடி மின்னலுடழ் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஹிமாசலில்...: ஹிமாசல பிரதேசத்தில் பெய்த பலத்த மழையால் மண்டி மாவட்டத்தில் 46 சாலைகள், குல்லுவில் 22 சாலைகள் உள்பட 102 சாலைகள் மூடப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். சிா்மௌா் மாவட்டத்தில் உள்ள நஹான் பகுதியில் அதிகபட்சமாக 67.4 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், செப்டம்பா் 9-ஆம் தேதி வரை அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் எனக் கணித்த இந்திய வானிலை ஆய்வு மையம், சனிக்கிழமை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கருதி மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






