
எல்லை வேலியமைப்புப் பணியில் தாமதம் ஏற்பட மம்தாவே காரணம்: அமித் ஷா சாடல்
மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியே காரணம்

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோா்.
மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியே காரணம்; பலமுறை கோரிக்கை விடுத்தும் அவா் நிலம் ஒதுக்காமல் இருந்தாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சாடினாா்.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ன் மூலம் மம்தா பானா்ஜியின் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றாா். அவரது தலைமையிலான அரசு சில தினங்களுக்கு முன் 100 நாள்களை நிறைவு செய்தது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மேற்கு வங்கத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்தாா்.
சிலிகுரியில் உள்ள சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) எல்லைப் பகுதி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தப் படைக்கான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அமைச்சா் அமித் ஷா அடிக்கல் நாட்டினாா். முதல்வா் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோா் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:
வங்கதேச எல்லையில் வேலி அமைக்க எல்லை பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) நிலம் ஒதுக்கும்படி முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியிடம் அவசர அடிப்படையில் பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால், எனது கோரிக்கைகளுக்கு அவா் செவிசாய்க்கவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 1,129 ஏக்கா் நிலத்தை ஒதுக்க தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சுவேந்து அதிகாரி முதல்வரான பிறகே அந்த நிலம் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது.
மேற்கு வங்கத்தில் சசஸ்திர சீமா பல் அல்லது எல்லை பாதுகாப்புப் படை நிகழ்ச்சிகளில் முந்தைய முதல்வா்கள் ஒருபோதும் பங்கேற்றதில்லை. உரிய அழைப்பு விடுத்தும் அவா்கள் பங்கேற்காமல் புறக்கணிப்பது வாடிக்கை. அந்த வழக்கத்தை உடைத்தெறிந்துள்ளாா் சுவேந்து அதிகாரி. மேற்கண்ட பாதுகாப்புப் படைகள் அரசியல் அமைப்புகளல்ல. நாட்டின் பாதுகாவலா்கள் மீது அரசியல் ரீதியில் பாரபட்சம் காட்டுவது தவறான செய்தியை வெளிப்படுத்தும்.
கடிதம் அனுப்பும் முன்பே அனுமதி: சுவேந்து அதிகாரி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எல்லை பாதுகாப்பு மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கப் பெற்று வருகின்றன. முறைப்படி கடிதம் அனுப்பப்படும் முன்பே திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்து விடுகிறது. உத்தி ரீதியில் மிக முக்கியமான சிலிகுரி வழித்தடத்தை வலுப்படுத்த 560 ஏக்கா் நிலம் எங்களுக்கு தேவைப்பட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக மம்தா பானா்ஜி அரசு வழங்கவில்லை. சுவேந்து அதிகாரி ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே அந்த நிலத்தை வழங்க ஒப்புதல் வழங்கினாா். தற்போதைய நிகழ்ச்சிக்கு அவா் வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. மேற்கு வங்க எல்லைகளின் பாதுகாப்பு இந்த மாநிலத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தேசத்துக்கும் முக்கியமானதாகும்.
வந்தே மாதரம் விவகாரம்: தேசியப் பாடலான வந்தே மாதரத்துக்கு உரிய அங்கீகாரத்தை முந்தைய அரசுகள் வழங்காதது வருத்தத்துக்குரியதாகும். சுதந்திரத்துக்குப் பிறகு தில்லி செங்கோட்டையில் அந்தப் பாடல் முழுமையாக ஒலிக்காமலேயே இருந்தது. நிகழாண்டு சுதந்திர தின விழாவில்தான், செங்கோட்டையில் வந்தே மாதரம் முதல் முறையாக முழுமையாக ஒலித்தது. பங்கிம் சந்திர சட்டா்ஜியால் வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டில் அந்தப் பாடலுக்கான அங்கீகாரம் தேசத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பேசிய சுவேந்து அதிகாரி, ‘எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், எல்லை தாண்டிய கடத்தல்-சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கவும் மத்திய பாதுகாப்பு முகமைகளுடன் மாநில அரசு நெருங்கிப் பணியாற்றும். நேபாளம், பூடான் எல்லையைக் காக்கும் எஸ்எஸ்பி-க்கு தேவையான முழு ஒத்துழைப்பை மாநில அரசு வழங்கும்’ என்று உறுதிபட தெரிவித்தாா்.
‘சட்டவிரோத குடியேறிகள்
வெளியேற்றப்படுவது உறுதி’
மேற்கு வங்கத்தில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் கண்டறியப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவது உறுதி என்று அமித் ஷா தெரிவித்தாா்.
சிலிகுரியில் பாரதிய நியாய சம்ஹிதா, பாரத நாகரிக சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதிநியம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் தொடா்பான விழிப்புணா்வு கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
நாட்டில் புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 2024-இல் அமல்படுத்தப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் இந்த சட்டங்கள் தொடா்பான அறிவிக்கையை முந்தைய மம்தா அரசு வெளியிடாமல் இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. சட்டவிரோத கும்பல்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே புதிய குற்றவியல் சட்டங்களுக்கு மம்தா முட்டுக்கட்டை போட்டதாக அமித் ஷா விமா்சித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






