FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

வங்காள விரிகுடாவில் அதிகரிக்கும் நிலநடுக்க அபாயம்: ஐஐடி ஆய்வில் தகவல்!

வங்காள விரிகுடாவில் நிலநடுக்க அபாயம் அதிகரித்து வருவதாக ஐஐடி கரக்பூர் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 9:11 am IST

வங்காள விரிகுடாவில் நிலநடுக்க அபாயம் அதிகரித்து வருவதாக ஐஐடி கரக்பூர் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஐஐடி கரக்பூர் சமீபத்தில் நடத்தியது. அந்த ஆய்வில் டெக்டோனிக் தட்டுகள் நகர்தல், பெருமளவிலான வண்டல் படிமங்கள் மற்றும் கடலுக்கு அடியில் பழமையான பிளவுகள் மீண்டும் செயல்படத் தொடங்குதல் போன்ற காரணங்களால் வங்காள விரிகுடா பகுதியில் மிதமான முதல் தீவிரமான நிலநடுக்கங்கள் வரை ஏற்படும் சாத்தியங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அங்குள்ள பிளவுகளில் உள்ள அழுத்தம் வெளியேறினால் அவை மீண்டு செயல்படத் தொடங்கி, கடலோர பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள கடலோரப் பகுதிகளில் பேரிடர் தயார்நிலை, வலுவான உள்கட்டமைப்பு, கட்டடக் கட்டுமான விதிமுறைகளை மறுஆய்வு செய்தல் போன்றவை அவசியமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளில் ஒடிசாவின் பாரதீப், ஜகத்சிங்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் சுமார் 8 முதல் 10 முறை லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. ஆனால், அவை பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

ஒடிசாவில் கடந்த 2014 ஆம் ஆண்டில் 5.8 என்ற ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஜகத்சிங்பூர், பாரதீப், கேந்திரபாரா மற்றும் ஜாஜ்பூர் போன்ற கடலோர மாவட்டங்களை பாதிப்புக்குள்ளாக்கியது. இதில், சுமார் 200 பேர் வரை காயமடைந்தனர்.

கடந்த ஆண்டும் வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்க உருவானதைத் தொடர்ந்து, அதன் அதிர்வுகள் பாரதீப் மற்றும் ஜகத்சிங்பூர் உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் உணரப்பட்டன. இவ்விரு நகரங்களும் 'நிலநடுக்க மண்டலம் III'-ன் கீழ் வருகின்றன. மிதமான சேத அபாயம் கொண்ட மண்டலமாக வகைப்படுத்தப்பட்ட இந்தப் பகுதியில் தீவிர நிலநடுக்கங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பிட்ட பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்கள் அனுமதிக்கப்பட்ட உயர வரம்புகளை பின்பற்றியுள்ளதா என்பதை கண்காணிக்கவும், விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தவும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

2014-ஆம் ஆண்டில் ஒடிசா மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடிக்கவும், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமான பழைய கட்டமைப்புகளை பழுதுபார்க்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், 109 தொடக்கப் பள்ளிகள் உட்பட 261 பாதுகாப்பற்ற பள்ளி கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றுகூட இடிக்கப்படவில்லை.

நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய வகையில் கட்டடங்களைக் கட்ட தொழில் நிறுவனங்களுக்கு அரசு நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாக பாரதீப் கூடுதல் மாவட்ட ஆட்சியர் நிரஞ்சன் பெஹெரா தெரிவித்துள்ளார். அரசு கட்டடங்களும் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் விதிமுறைகளைப் பின்பற்றி கட்டப்படுவதாக அவர் கூறினார்.

Summary

A recent study conducted by IIT Kharagpur has indicated that the risk of earthquakes in the Bay of Bengal is increasing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.