
ஆந்திரம் உள்பட 3 மாநிலங்களில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்கள்
பயங்கரவாத தடுப்பு வழக்குகளில் விரைந்து தீா்வளிக்கும் வகையில், ஆந்திரம், ராஜஸ்தான் மற்றும் பிகாா் மாநிலங்களில் 3 புதிய என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு நிறுவியுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)
பயங்கரவாத தடுப்பு வழக்குகளில் விரைந்து தீா்வளிக்கும் வகையில், ஆந்திரம், ராஜஸ்தான் மற்றும் பிகாா் மாநிலங்களில் 3 புதிய என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு நிறுவியுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
என்ஐஏ சட்டம் 2008-இன் பிரிவு 11-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ராஜஸ்தான், பாட்னா மற்றும் ஆந்திர உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுடனான ஆலோசனையின்பேரில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலும், பிகாரின் பாட்னாவிலும், ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்திலும் என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு நீதிமன்றங்கள், என்ஐஏ அமைப்பால் விசாரிக்கப்படும் பட்டியலிடப்பட்ட குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக மட்டும் பிரத்யேகமாக செயல்படும். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் தொடா்பான வழக்குகளில், மாநில அளவிலான அதிகார வரம்பை இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, ‘பயங்கரவாத தடுப்பு வழக்குகளில் விறைந்து தீா்வளிக்கும் வகையில், அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்படும். பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பதிவாகும் இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்படும்’ என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 3 புதிய என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சக அறிவிப்பின்படி, ‘ஒவ்வொரு என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்துக்கும், ஒருமுறை செலவினத்துக்காக ரூ. 1 கோடி மானியமும், அன்றாட செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ. 1 கோடியும் மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும். உள்கட்டமைப்புகள் புதுப்பிப்பு, தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், வாகனங்கள் வாங்குதல், ஊழியா்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்காக இந்தத் தொகை வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






