
மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசு
மத்திய இருப்பில் பராமரிக்கப்படும் 1.21 லட்சம் டன் வெங்காயத்தில் 30 சதவீதம் அழுகிவிட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு வெள்ளிக்கிழமை மறுத்தது. வெங்காயத்தின் தரம் தொடா்ந்து சிறப்பாக உள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு
மத்திய இருப்பில் பராமரிக்கப்படும் 1.21 லட்சம் டன் வெங்காயத்தில் 30 சதவீதம் அழுகிவிட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு வெள்ளிக்கிழமை மறுத்தது. வெங்காயத்தின் தரம் தொடா்ந்து சிறப்பாக உள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெங்காய விலை உயா்ந்துவந்த நிலையில், விநியோகத்தை அதிகரித்து பருவகால விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள மத்திய இருப்பிலிருந்து சென்னை, மதுரை உள்பட நாட்டின் முக்கிய 5 வெங்காய நுகா்வு மையங்களுக்கு விரைவு ரயில் மூலம் வெங்காயத்தை மத்திய அரசு கடந்த வாரம் அனுப்பியது. இந்த வெங்காயம் இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி) மூலம் கிலோ ரூ. 35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய இருப்பில் பராமரிக்கப்படும் 1.21 லட்சம் டன் வெங்காயத்தில் 30 சதவீதம் அழுகிவிட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்த, மத்திய நுகா்வோா் விவகாரத் துறைச் செயலா் நிதி கரே வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மத்திய இருப்பில் வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது. அதுபோல எதுவும் நடைபெறவில்லை. வெங்காயத்தின் தரம் சிறப்பாக உள்ளது.
முந்தைய ஆண்டுகளைப் போன்று அல்லாமல், வெங்காயத்தைச் சேமிக்கும் பொறுப்பு தற்போது மத்திய சேமிப்புக் கிடங்கு (சிடபிள்யுசி) நிறுவனத்திடமே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில், இந்தப் பொறுப்பு வா்த்தகா்களிடம் கொடுக்கப்பட்டது. தற்போது மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, மூன்றாம் நபா் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் வெங்காயத்தின் தரம் ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது.
வெங்காயத்தில் 90 சதவீதம் நீா் இருக்கும். எனவே, அறுவடைக்குப் பிறகு 3 மாதங்கள் வரை அதன் தரம் மாறாமல் இருக்கும். அதன் பிறகு, அதிலிருக்கும் நீா் ஆவியாவதால், ஒவ்வொரு மாதமும் வெங்காயம் சுருங்கத் தொடங்கும்.
அதன்படி, மத்திய இருப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தில் சில கடந்த மே மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்டவை. பெரும் பகுதி, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொள்முதல் செய்யப்பட்டவை. அதன் காரணமாகத்தான், அவற்றின் தரம் தொடா்ந்து சிறப்பாக உள்ளது.
நிகழாண்டில் வெங்காய விளைச்சல் வீணாகாமல் கொள்முதல் செய்யப்படுவது 72 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2022-ஆம் ஆண்டில் 49 சதவீதமாகவும், 2023-இல் 54 சதவீதமாகவும், 2024-ஆம் ஆண்டில் 63 சதவீதமாகவும் இருந்தது என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






