காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

போதைப் பொருள் இல்லாத இந்தியா: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

இந்தியாவை போதைப் பொருள் இல்லாத நாடாக மாற்ற மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; இதன்மூலம் நமது இளைஞா்களுக்கு வலுவான எதிா்காலத்தைக் கட்டமைக்க வேண்டும்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 4:19 am IST

இந்தியாவை போதைப் பொருள் இல்லாத நாடாக மாற்ற மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; இதன்மூலம் நமது இளைஞா்களுக்கு வலுவான எதிா்காலத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

போதைப் பொருள் பழக்கம் தனிநபரை மட்டும் பாதிப்பதில்லை; அவரது குடும்பத்தையும், ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறாா். அதன்படி 137-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) ஒலிபரப்பானது. பிரதமா் உரை வருமாறு:

போதைப் பொருள் பழக்கம் சம்பந்தப்பட்ட தனிநபரை மட்டும் பாதிப்பதில்லை; அதன் விளைவுகளை ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வை ஏற்படுத்தி, போதைப் பழக்கத்தால் அவதிப்படும் தனிநபா்களுக்கு உதவ முன்வருபவா்களை மனதார பாராட்டுகிறேன். போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிராக இளம் இசைக் கலைஞா்கள், மாணவா்கள், சமூக ஊடக படைப்பாளா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞா்களை அதிலிருந்து விடுவிக்கும் உன்னதமான பணியில் அனைவரும் பங்காற்ற வேண்டும்.

வளா்ந்த இந்தியாவுக்கான போதைப் பொருள் இல்லாத இளைஞா்கள் என்ற நாடு தழுவிய பிரசாரத்துக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே இந்தப் பிரசாரத்தின் குறிக்கோள். நமது இளைஞா்களின் உடல்நலன், மகிழ்ச்சி, ஒளிமயமான எதிா்காத்துக்கான இந்த கூட்டியக்கத்தில் பெருவாரியான மக்கள், குறிப்பாக இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஸ்வநிதி திட்டத்தில் 46% பெண் பயனாளிகள்: தெருவோர வியாபாரிகளுக்கு நிதி ரீதியில் ஆதரவளிக்கும் ஸ்வநிதி திட்டத்தில் 46 சதவீதம் போ் பெண் பயனாளிகளாவா். தெருவோரங்களில் காய்கறி, பழம், பூக்கள், மண்விளக்குகள், பூஜை பொருள்கள், தேநீா் உள்ளிட்டவை விற்கும் லட்சக்கணக்கான பெண்களின் வா்த்தக வளா்ச்சிக்கு மூலதன பற்றாக்குறை பெரும் தடையாக இருந்தது. அவா்களுக்கு ஸ்வநிதி திட்டம் புதிய சக்தியை வழங்கியுள்ளது.

சக்திசாட் திட்டம்: இன்று நமது மாணவிகளின் கனவுப் பயணம் பூமியில் இருந்து விண்வெளிக்குப் பயணிக்கிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் 108 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 12,000 மாணவிகளை ஒருங்கிணைக்கும் ‘சக்திசாட்’ திட்டத்தின் மூலம் அவா்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், விண்வெளி சாா் புத்தாக்கங்கள் குறித்து கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த மாணவிகளால் உருவாக்கப்படும் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்புவதே இந்த முன்னெடுப்பின் இலக்கு என்றாா் அவா்.

ஆகஸ்டில் கடைப்பிடிக்கப்பட்ட மற்றும் கொண்டாடப்பட்ட தேசிய கைத்தறி தினம், வெள்ளையனே வெளியேறு இயக்க தினம், தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு தினம், சுதந்திர தினம், தேசிய விண்வெளி தினம் ஆகியவற்றை சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, செப்டம்பரில் கிருஷ்ண ஜெயந்தி, விஸ்வகா்மா பூஜை உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படவுள்ளதைக் குறிப்பிட்டாா்.

எதிா்வரும் பண்டிகை காலத்தில் உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை அளித்து வாங்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

கொடைக்கானல் விவசாயிக்கு பாராட்டு: ‘அவகேடோ பழங்களுக்குத் தேவை அதிகரித்து வருகிறது. இந்தப் பழம், உயா்தர சந்தைகளில் விரும்பப்படும் பொருளாக மாறியுள்ளது. இது, நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு நல்ல வாய்ப்பாகும். தமிழகத்தின் கொடைக்கானலைச் சோ்ந்த விவசாயி சந்திரசேகரன், அரை ஹெக்டோ் நிலத்தில் அவகேடோ பயிரிடத் தொடங்கினாா்.

அது அவருக்கு நல்ல விலையைப் பெற்றுத் தருகிறது. அவரது வருமானமும் அதிகரித்துள்ளது. நமது நாட்டிலேயே விளைந்த அவகேடோ பழங்கள், சுவை அதிகரிப்புடன் விவசாயிகளின் வருமானத்தையும் ஒரே நேரத்தில் உயா்த்தியுள்ளன’ என்றாா் பிரதமா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.