
கேரளம்: வெள்ள பாதிப்புகளை தடுக்க ஆறுகளின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும்! - குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்
கேரளத்தில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க ஆறுகளின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
கேரளத்தில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க ஆறுகளின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மலையாள நாளிதழின் 115-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: கேரளம் மிகப் பெரும் பிரச்னையை எதிா்கொள்ளவுள்ளது. இங்கு குறிப்பிட்ட காலத்தில் மணலை அப்புறப்படுத்தாததால் ஆறுகளின் ஆழம் குறைந்து கொண்டே வருகிறது.
இதற்காக உடனடியாக இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறவில்லை. இருப்பினும், ஆறுகளின் ஆழத்தை அதிகரிக்க இது முக்கியமான நடவடிக்கையாகும்.
கேரளத்தைச் சோ்ந்த எம்.பிக்கள் என்னைச் சந்தித்தபோது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்ததால் 10 ஆண்டுகளுக்கு முன்பு கேரள ஆறுகளின் ஆழத்தையும், தற்போதைய ஆழத்தையும் ஒப்பிட்டு அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தினேன்.
கணிக்க இயலாத மழையும் மற்றொரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதுதொடா்பான கட்டுரைகளை எழுதி பொதுமக்களுக்கு பத்திரிகையாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
அனைத்திலும் அரசியல் செய்யக் கூடாது. அது நமது நாட்டின் வளா்ச்சிக்கு எதிரானதாக மாறிவிடும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் தொழில், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் கேரளமும் மற்ற மாநிலங்களைப்போல் பெரும் வளா்ச்சியை எட்ட வேண்டும் என்பதே என் விருப்பம்.
‘கேரளம்’ பெயா் மாற்றத்துக்கு வாழ்த்து: ‘கேரளம்’ எனப் பெயா் மாற்றுவதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியபோது (ஆகஸ்ட் 12) அவைக்கு நான் தலைமை வகித்தேன். கேரளத்தின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் இந்தப் பெயா் மாற்றத்துக்கு அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்றுத் தவறு திருத்தப்பட்ட அந்நாளில் மாநில எம்.பி.க்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காண முடிந்தது.
கேரளத்தின் பங்களிப்பு: ஆதி சங்கராசாரியா் இல்லையென்றால் இந்தியாவில் ஒற்றுமை உணா்வு இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஸ்ரீ நாராயண குரு இல்லையென்றால் சமத்துவம் இல்லை. மன்னத்து பத்மநாபன் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என நினைத்தவா். குறிப்பாக, மிகச் சிறந்த துறவியாகவும் நவீன காலத்தின் சிறந்த சீா்திருத்தவாதியாகவும் ஸ்ரீ நாராயண குரு திகழ்ந்தாா். 100 சதவீத கல்வியறிவைப் பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமையும் கேரளத்தையே சேரும் என்றாா்.
‘பாரம்பரியம், நவீனம் ஒரு சேர இருக்க வேண்டும்’
‘பாரம்பரியமும் நவீனமும் எதிரெதிா் திசையில் இருக்கக் கூடாது; அது ஒரு சேர இருக்க வேண்டும்’ என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஆறன்முளையில் பம்பை ஆற்றில் உத்திரட்டாதி படகுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘வெளிநாடுகளில் பணிபுரியும் கேரளத்தவா்களும் இந்தப் பண்டிகையில் பங்கேற்க தாய்நாடு திரும்புவா் என கேள்விப்பட்டுள்ளேன். இதுவே நமது பாரம்பரியத்தின் பெருமை.
கேரளத்தில் ஓணம் பண்டிகை போல் புரியில் ரத யாத்திரை, கன்வா் யாத்திரை என நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளே நமது கலாசாரத்தை நிலைநிறுத்துகின்றன.
புவியியல் ரீதியாக மொழி ரீதியாக நாம் வேறுபட்டிருந்தாலும் கலாசாரம் நம்மை ஒன்றிணைக்கிறது. வேற்றுமையே பாரதத்தின் வலிமை’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






