

மத்திய பட்ஜெட்டில் மருத்துவ காப்பீடுகளுக்கு சலுகைகள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது என்னவோ மருத்துவத் துறைக்குத்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மன நலம் மற்றும் சிகிச்சை முறைகள், மருத்துவ அவசரகாலத்தில், குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கலை குறிப்பாக ஏழை, எளிய மக்களை அதிகம் பாதிக்கும் மருத்துவச்செலவுகளை கவனத்தில் கொண்டு, அதனைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் மருத்துவ மையங்களை ஏற்படுத்துதல், மருத்துவமனை உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், மனித வளத்தை அதிகரித்தல் போன்றவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வட இந்தியாவுக்கு தேசிய மன நல மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும். பல்வேறு மண்டலங்களில் தற்போது அடிப்படை தேசிய மருத்துவ மையங்கள் குறைவாகவே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
வட இந்தியாவில் தற்போது தேசிய மனநல மருத்துவ மையம் இல்லை. எனவே, ராஞ்சி மற்றும் தேஜ்பூர் பகுதிகளில் தேசிய மனநல மருத்துவ மையங்களை ஏற்படுத்துவோம் என்று அறிவித்தார்.
மாவட்ட மருத்துவமனைகளில், விபத்துக் கால சிகிச்சை அளிக்கும் திறனை 50 சதவீதம் விரிவுபடுத்தப்படும் என்றும், அவசரகால சிகிச்சைக்கு நோயாளியின் குடும்பத்தினர் அதிகமாக செலவிடுவதைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமையும் என்றார்.
மறுபக்கம், 17 வகையான புற்றுநோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல், 7 அரிதான நோய்களுக்கான மருந்துகளுக்கும், மருத்துவக் காரணங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து தனிநபர் பயன்பாட்டுக்காக வாங்கப்படும் உணவுகளுக்கும் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில், புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரியில் விலக்கு அளிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தன்னுடைய அறிவிப்பில் கூறினார்.
அடுத்து, பாரம்பரிய மருத்துவத்துக்கும் ஒரு பார்வை
நாடு முழுவதும் மூன்று தேசிய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும், கரோனாவுக்குப் பிறகு பாரம்பரிய சிகிச்சைகளுக்கு உத்வேகம் கிடைத்திருக்கிறது. ஆயுர்வேத மூலிகைகளை உற்பத்தி செய்து, பயிர் விளைச்சலிலும் லாபம் அடையலாம், எனவே, ஆயுர்வேத மருந்தகங்கள், மருந்து சோதனைக் கூடங்கள் போன்றவை உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
இதுபோலவே உயிரி-மருத்துவத் துறைக்கு நிதி ஒதுக்கீடு, மருத்துவத் துறையில் பணியாற்றும் பணியாளர்களை உருவாக்குவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.