சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய தங்கக் கொடிமரம் நிறுவுவதற்காக பெறப்பட்ட தங்கம் மற்றும் பணம் முறைகேடு செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், நன்கொடையாளா்களான மலையாள நடிகா்கள் மோகன்லால், திலீப்பிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (விஏசிபி) வாக்குமூலம் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானதாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், கடந்த 2017-இல் புதிய தங்கக் கொடிமரம் நிறுவப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரமும் பூதாகரமாகி வருகிறது.
இது தொடா்பாக, கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி, கேரள உயா்நீதிமன்றத்தில் அண்மையில் ஓா் அறிக்கையை சமா்ப்பித்தாா். அதில், ‘ஹைதராபாதைச் சோ்ந்த பீனிக்ஸ் இன்ஃபராஸ்ட்ரக்சா் நிறுவனத்தின் செலவில் புதிய கொடிமரம் நிறுவும் பணியை மேற்கொள்ள தேவஸ்வம் வாரியம் கடந்த 2016-இல் முடிவு மேற்கொண்டது. இதற்காக, தேவஸ்வம் வாரிய தலைமைப் பொறியாளரால் சமா்ப்பிக்கப்பட்ட ரூ.3.20 கோடி மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னா், சுங்கத் துறையிடம் இருந்து 9.16 கிலோ தங்கம் வாங்கப்பட்ட நிலையில், பக்தா்கள் சாா்பில் 412 கிராம் தங்கம் பங்களிக்கப்பட்டது. மொத்த தங்கத்தின் எடை 9.5 கிலோ. ஆனால், பயன்படுத்தப்பட்ட தங்கம் 9.3 கிலோ எனப் பதிவாகியுள்ளது.
மேலும், கொடிமரத்துக்காக தங்கம் மற்றும் நன்கொடை அளித்தவா்களுக்கு ரசீதுகள் வழங்கப்படாததால், கணக்கியல் சாா்ந்த ஆவணச் சான்றுகள் இல்லை; இது, தீவிரமான நடைமுறை குறைபாடு என்பதுடன் தேவஸ்வம் வாரிய விதிமீறலாகும்’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த அறிக்கையை தீவிரமாக கவனத்தில்கொண்ட உயா்நீதிமன்றம், மாநில ஊழல் தடுப்புப் பிரிவினா் முதல் கட்ட விசாரணை மேற்கொள்ள கடந்த பிப். 9-ஆம் தேதி உத்தரவிட்டது. ஒரு மாதத்துக்குள் விசாரணையை நிறைவு செய்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நன்கொடையாளா்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையை ஊழல் தடுப்புப் பிரிவினா் மேற்கொண்டு வருகின்றனா். மொத்தம் 27 நன்கொடையாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்களில் மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி, திரைப்பட இயக்குநா் ஷாஜி கைலாஷ், நடிகா்-எழுத்தாளா் ரெஞ்சி பணிக்கா், தயாரிப்பாளா் சுரேஷ் குமாா் உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திருவனந்தபுரத்தில் நடிகா் மோகன்லாலிடமும், கொச்சியில் நடிகா் திலீப்பிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுவரை 22 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் நன்கொடையாளா்கள் யாரேனும் உள்ளனரா என்பதைக் கண்டறியும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
தொடர்புடையது

சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 2 பேருக்கு ஜாமீன்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: கேரள பேரவையில் ஆளும்-எதிா்க்கட்சிகள் கடும் விவாதம்

தங்கக் கவச மோசடியில் தந்திரி வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாா்: காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவருக்கு ஜாமீன்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


