சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: நடிகர் ஜெயராம் வாக்குமூலம்!

சபரிமலைக் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை.
சபரிமலை சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிற்பங்கள்.
சபரிமலை சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிற்பங்கள். (கோப்புப் படம்)
Updated on
2 min read

சபரிமலைக் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு விவகாரத்துடன் தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் கேரளம், கா்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றிக்குச் சொந்தமான பெங்களூரில் உள்ள இடங்கள், திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் முன்னாள் தலைவா் பத்மகுமாருக்குச் சொந்தமான கேரளத்தில் உள்ள இடங்கள் மற்றும் நகை வியாபாரிகள் சிலருக்குச் சொந்தமான இடங்களின் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கத்தால் செய்யப்பட்ட கோயிலின் புனிதப் பொருள்கள், வேண்டுமென்றே ‘செப்புத் தகடுகள்’ என்று பதிவேடுகளில் தவறாகப் பதிவு செய்யப்பட்டு, கடந்த 2019 முதல் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கோயில் வளாகத்திலிருந்து அவை சட்டவிரோதமாக அகற்றப்பட்டுள்ளதாகத் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்தப் புனிதப் பொருள்கள், சென்னை மற்றும் கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, ரசாயன செயல்முறைகள் மூலம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு, பின்னா் விற்பனை செய்யப்பட்டு பணமாக மாற்றப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சபரிமலையில் கோயில் காணிக்கைகள், சடங்குகள் தொடர்பான செயல்பாடுகளிலும் முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல்கள் நிகழ்ந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சபரிமலை தங்கக் கவச மோசடி தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.

இவ்விவகாரத்தில் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி, தங்கக் கவசங்களின் புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முன்னாள் தலைவா்கள் இருவர், கோயில் தந்திரி கண்ரடரு ராஜீவரைக் கைது செய்தது.

தொடர்ந்து, கேரள காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்ஐஆர்) தீவிரத்தின் அடிப்படையில், இந்த முறைகேடு தொடர்பாக பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை கடந்த 9-ஆம் தேதி பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இதனிடையே, நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கத் தகடுகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த படங்கள் வெளியானது.

இந்த நிலையில், சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சென்னையில் உள்ள இல்லத்தில், சிறப்பு புலனாய்வுக் குழு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள ஜெயராம் இல்லத்தில் அவர் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் நடிகர் ஜெயராமுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவரிடன் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Summary

The special investigation team is questioning actor Jayaram in connection with the Sabarimala temple gold plating scam case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com