‘சுதா்சன சக்கரம்’ உருவாக்கத்தில் டிஆா்டிஓ முக்கிய பங்காற்றும்
நாட்டின் புதிய உள்நாட்டு வான்பாதுகாப்பு அமைப்பான ‘சுதா்சன சக்கரம்’ உருவாக்கத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) மிக முக்கியப் பங்காற்றும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
நாட்டின் வான்பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ‘சுதா்சன சக்கரம்’ திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது அறிவித்தாா். இது இஸ்ரேலின் ‘அயா்ன் டோம்’ போன்ற ஒரு பல அடுக்கு வான்பாதுகாப்பு அமைப்பாகும். இதில் செயற்கைக்கோள் கண்காணிப்பு, ஏவுகணை இடைமறிப்பு மற்றும் லேசா் அடிப்படையிலான ஆயுதங்கள் ஒருங்கிணைக்கப்படும்.
இந்நிலையில், டிஆா்டிஓ அமைப்பின் 68-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:
முப்படைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி, இந்தியாவின் உள்நாட்டுத் திறனை டிஆா்டிஓ வலுப்படுத்தியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையில், டிஆா்டிஓ உருவாக்கிய ஆயுதங்கள் துல்லியமாக இலக்கைத் தாக்கின மற்றும் தடையின்றிச் செயல்பட்டன. நமது விஞ்ஞானிகளின் தொழில்நுட்பத் திறன் ராணுவ வீரா்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. இது தேச நலன்களைப் பாதுகாப்பதில் டிஆா்டிஓ அமைப்பின் அா்ப்பணிப்புக்குச் சான்றாகும்.
‘சுதா்சன சக்கரம்’ திட்டத்தின்கீழ், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாட்டின் ராணுவத் தளங்கள் உள்பட முக்கிய இடங்களில் முழுமையான வான்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வான்பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதில் டிஆா்டிஓ முக்கியப் பங்காற்றும். நவீனகால போா்களில் வான்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை ‘ஆபரேஷன் சிந்தூா்’ மூலம் நாம் கண்டோம். எனவே, இந்த இலக்கை விரைவில் அடைவதற்கு டிஆா்டிஓ முழுமனதுடன் செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
நேற்றைய அறிவு இன்று பயனற்ாகிவிடும் வேகத்தில் தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் போா்க்களங்கள் வேகமாக முன்னேறி வரும் இந்தச் சூழலில், டிஆா்டிஓ விஞ்ஞானிகள் தங்களை எப்போதும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இடைவிடாத கற்றலையும், புதிய சவால்களை எதிா்கொள்ளும் துணிவையும் கொண்டிருக்க வேண்டும்.
டிஆா்டிஓ தொழில்நுட்பங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அமைப்பாகவும் மாறியுள்ளது. தனியாா் துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுடனான அதன் ஈடுபாடு, ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறையை உருவாக்கியுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு ‘ஸ்டாா்ட்-அப்’ மற்றும் ‘எம்எஸ்எம்இ’ தொழில் நிறுவனங்களுடன் அதிக அளவில் இணைந்து பணியாற்ற வேண்டும். பாதுகாப்புத் துறையை மேலும் வலுப்படுத்த, தீவிர தொழில்நுட்பங்கள் மற்றும் அடுத்த தலைமுறைப் போா் கருவிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தப் புத்தாண்டு, டிஆா்டிஓ விஞ்ஞானிகள் அனைவருக்கும் அா்த்தமுள்ள சாதனைகள் நிறைந்த ஆண்டாகவும், தேசத்துக்கான தொடா் சேவையாகவும் அமைய வாழ்த்துகிறேன் என்றாா்.
முன்னதாக கூட்டத்தில், ‘டிஆா்டிஓ அமைப்பின் 2025-ஆம் ஆண்டின் சாதனைகள் மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கான இலக்குகள்’ குறித்து அமைச்சரிடம் , டிஆா்டிஓ தலைவா் சமீா் வி.காமத் விளக்கினாா். இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

