

சத்தீஸ்கரில் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது பெண் காவலரைத் தாக்கி அவரின் சீருடைகளை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று பெண் காவலர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவருக்கு தொடர்புள்ளதாக கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி சுரங்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. டிசம்பர் 12ஆம் தேதி முதலே போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டிச. 27ஆம் தேதி 300க்கும் அதிகமானோர் கூடியதால், அப்பகுதியில் காவலர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த பெண் காவலரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர், தாக்கியுள்ளனர். அத்தோடு அவரின் சீருடையையும் கிழித்து அவதூறாகப் பேசி விரட்டியுள்ளனர். இதனை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் விடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளனர்.
அந்த விடியோவில் பெண் காவலர், தன்னை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டும், அடித்து துன்புறுத்தியதோடு மட்டுமின்றி அவரின் சீருடைகளை கிழித்து எச்சரித்து விரட்டியுள்ளது பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. மேலும் ஒருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சித்ரசென் சாஹு என்பவரை பெண் காவலர்கள் செருப்பு மாலை அணிவித்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, பிறகு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.